நாட்டின் மருந்துப் பற்றாக்குறைக்கான தீர்வுகள் தொடர்பில் பிரதமர் அவதானம்

நாட்டின் மருந்துப் பற்றாக்குறைக்கான குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.

பிரதமர் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான தீர்வுகள் குறித்து ஆராயும் நோக்கில் சுகாதார அமைச்சுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் காணப்படும் மற்றும் பற்றாக்குறையாக உள்ள மருந்து வகைகள் தொடர்பான அறிக்கையொன்றை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கை பெற்றுக் கொண்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகளுக்கான கொடுப்பனவை இலங்கை ரூபாவில் செலுத்த இரு நாட்டு அரசாங்கங்களும் இணங்கியுள்ளதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், பிரான்ஸ் அரசாங்கத்தினால் நாளைய தினம் நன்கொடையாக வழங்கப்படவுள்ள மருந்துகளின் மூலம் நாட்டில் 90 நாட்களுக்கு தொடரச்சியாக சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மருந்துகளை கொள்வனவு செய்வதை துரிதப்படுத்தும் வகையில், ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைச் சட்டத்தை திருத்துவதற்கு சுகாதார அமைச்சரின் தலைமையில் சுயாதீன குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் 76 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவும் அதேவேளை, உள்நாட்டு மருந்து விநியோகத்தர்களுக்கு 33 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles