நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்துள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தொகுதியின் தாக்கம் காரணமாக இன்றையதினம் (21) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், வட மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகளில்
இலங்கைக்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதோடு, அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடல்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கி.மீ. வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும் என்பதோடு, அப்பகுதிகளில் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

Related Articles

Latest Articles