நாட்டில் மீண்டும் மஹிந்த சூறாவளி வீசும்!

🛑 நாட்டில் மீண்டும் மஹிந்த சூறாவளி வீசும்!

🛑 சூழ்ச்சிகளுக்கு அடிபணியாத ஆட்சியாளர்களே நாட்டுக்கு தேவை

🛑நாட்டில் மீண்டும் போர் ஏற்படாது என்பதை உறுதியாக கூறிவிடமுடியாது

இலங்கையில் மீண்டும் போர் ஏற்படாது என்பதை உறுதியாகக் கூறிவிடமுடியாது. ஏனெனில் புலிகள் போருக்கு தயாராவார்கள் என்பதை நாம் எவரும் நினைத்துகூட பார்க்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் மஹிந்த சூறாவளி வீசக்கூடும் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

‘ஹிரு” தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச மாளிகையில் இருந்து வெளியேறி தற்போது தங்காலை, கால்டன் இல்லத்தில் குடியேறியுள்ள மஹிந்த ராஜபக்ச, ஹிருவுக்கு வழங்கிய நேர்காணலின்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு மஹிந்தவால் வழங்கப்பட்ட பதில்களும் வருமாறு,

கேள்வி – போரை முடிப்பதற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினீர்கள். நாட்டை அபிவிருத்தி செய்தீர்கள், மக்கள் ஆதரவையும் வென்றீர்கள். ஆனால் என்றாவது ஒருநாள் அரச வதிவிடத்தையும் இழந்து சொந்த ஊருக்கு வந்துவிடுவோம் என நினைத்ததுன்டா?

பதில் – எனது பூர்வீக இல்லத்துக்கு வருவதைவிட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? உத்தியோகப்பூர்வ வதிவிடங்களில் இருந்தாலும் இங்கு இருப்பதையே விரும்புகின்றேன்.

கேள்வி – அப்படியானால் தற்போது
மகிழ்ச்சியாகவா இருக்கின்றீர்கள்?
பதில் – ஆம்.

கேள்வி – பல பிரச்சினைகளுக்கு மத்தியில் எப்படி இவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றது?

பதில் – அதுதான் எனது குணவியல்பு என நினைக்கின்றேன். நான் எதையும் பிரச்சினையாகக் கருதுவதில்லை.

கேள்வி – புதிய அரசின்கீழ் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இப்படி நடக்கும் என நினைத்தீர்களா?

பதில் – அவ்வாறு நினைக்கவில்லை. இருந்தாலும் எதையும் எதிர்கொள்ள தயார்.

கேள்வி – இந்த தீர்மானம் (ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் நீக்கம்) பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் – அரசால் எடுக்கப்பட்டுள்ள முடிவு அவர்களுக்கு சரியென படும். எமக்கு பிழையெனபடுகின்றது.

கேள்வி – தேசிய மக்கள் சக்தி அரசு, ராஜபக்சக்களை பழிவாங்குகின்றது என்ற விமர்சனம் உள்ளது. இதனை நீங்கள் உணருகின்றீர்களா?

பதில் – ராஜபக்சக்கள் மட்டும் அல்ல தமக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அத்தனை பேரையும் பழிவாங்குகின்றனர்.

கேள்வி – எதிர்கால அரசியல் திட்டம் என்ன?

பதில் – அரசியல் பயணம் தொடரும்.

கேள்வி – நாட்டில் மீண்டும் மஹிந்த சூறாவளி வீசுமா?

பதில் – வீசும், நிச்சயம் வீசும். அது மஹிந்த சூறாவளியாகவும் இருக்கலாம். அல்லது வேறு சூறாவளியாகவும் இருக்கலாம்.

கேள்வி – உங்களுக்கு அது விளங்குகின்றதா?

பதில் – ஆம். எனக்கு விளங்குகின்றது.

கேள்வி – பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்ததை பற்றி இன்று என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் – மகிழ்ச்சியாக உள்ளது. பயங்கரவாதத்தை முடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை ஒரு அதிஷ்டமாகக் கருதுகின்றேன்.

கேள்வி – நாட்டுக்கு முன்னால் பல சவால்கள் உள்ளன, சர்வதேச தலையீடுகள் உள்ளன என்று சிலர் கூறுகின்றனரே,

பதில் – இந்த சூழ்ச்சி எப்போதும் இருந்தது. அதற்கு அடிபணியாத ஆட்சியாளர்களே தேவை.

கேள்வி – உங்களுக்கு முன்னாள் இருந்த தலைவர்களால் போரை முடிக்க முடியாமல் போனது. உங்களால் அது எப்படி சாத்தியமானது?

பதில் – சிறந்த பாதுகாப்பு செயலாளர் ஒருவர் இருந்தார். முப்படைத்தளபதிகள் இருந்தனர். ஒரு சிறந்த குழுவின் கூட்டு முயற்சியின் பிரதிபலனாகவே அது அமைந்தது.

கேள்வி- எமது நாட்டில் மீண்டும் போர் ஏற்படக்கூடுமா?

பதில் – தற்போது நான் நினைக்கவில்லை. ஆனால் உறுதியாகவும் கூறிவிட முடியாது. ஏனெனில் புலிகள் போருக்கு தயாராவார்கள் என நாம் எவரும் நினைக்கவில்லை.

கேள்வி – மூன்று வருடங்களில் போர் முடிக்கப்படும் என எவரும் நினைக்கவில்லைதானே?

பதில் – மூன்று வருடங்கள்கூட செல்லவில்லைதானே….

நேர் கண்டவர் – ஹிரு நிருபர் பானுக ராஜபக்ச

தமிழாக்கம் – ஆர்.சனத்

நன்றி – ஹிரு தொலைக்காட்சி

Related Articles

Latest Articles