இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஜுன் 27 ஆம் திகதிவரை 26 லட்சத்து 5 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொவிஷீல்ட் (Covishield) , சீனாவின் தயாரிப்பான சினோ பாம் (Sinopharm), ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் – பை (Sputnik – V) ஆகிய தடுப்பூசிகள் இலங்கையில் மக்களுக்கு ஏற்றப்பட்டுள்ளன.
இதன்படி கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 3 லட்சத்து 72 ஆயிரத்து 899 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
2021 மார்ச் 26 ஆம் திகதி முதல் ஜுன் 27 ஆம் திகதிவரை 15 லட்சத்து 65 ஆயிரத்து 521 பேருக்கு சினோ பாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது டோஸை 5 லட்சத்து 13 ஆயிரத்து 195 பேர் பெற்றுள்ளனர்.
ஸ்புட்னிக் – பை தடுப்பூசி ஏற்றும் பணி ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பமானது. ஜுன் 27 வரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 795 பேருக்கு அந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இதில் 14 ஆயிரத்து 425 பேர் இரண்டாம் டோஸை பெற்றுள்ளனர்.
அதேவேளை, அடுத்துவரும் நாட்களிலும் இலங்கைக்கு தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன. செப்டம்பர் மாதம் முடியும்வரை சுமார் 13 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது. இன்றும் தொடர்கின்றது.
