வரும் 23ம் திகதி முதல் 10 நாட்கள் கட்டாயப் பொதுமுடக்கத்தை முன்னெடுக்க நேரிடும் என பல்துறை சார் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
கொவிட் தொற்று மோசமடைந்துவரும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக அரசாங்கம் பொதுமுடக்கம் தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அண்மை நாட்களாக கொவிட் தொற்றினால் நிலைமை மோசமடைந்துள்ளது. பொதுமுடக்கத்தை அறிவிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், அந்த கோரிக்கைகளை அரசாங்கம் புறந்தள்ளி வருகிறது. இந்த நிலையில் தொழிற்சங்கங்கள் கூட்டாக இதனை அறிவித்துள்ளன.
இலங்கையில் கோவிட் திரிபுகள் உருவாகும் வரை பார்த்துக்கொண்டிராது, நாட்டை அரசாங்கம் முடக்க வுண்டும்.
இதனை செய்யத் தவறினால், அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நாட்டை முடக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்று சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் இதன்போது தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கப்படும். ஒன்றும் நடக்காவிடின் திங்கட்கிழமை முதல் நாட்டை முடக்குவோம் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சுகாதார துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் தமது கடமைகளை உரிய வகையில் முன்னெடுக்கின்றன. ஏனைய அனைத்து துறைகளையும் சேர்ந்த தொழிற்சங்கங்களை இணைத்து நாட்டை முடக்குவோம் என சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.