” நாட்டை மீட்கக்கூடிய தேசிய வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்க தயார்” – சஜித்

” நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு தேசிய ஒருமைப்பாடு மற்றும் இணக்கப்பாடு கொண்ட தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம். அவ்வாறான வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்க தயார்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (19) விடுத்துள்ள விசேட அறிவிப்பில் கூறியவை வருமாறு,

” நாட்டில் பொருளாதார மற்றும் சமூக அழிவு நடைபெற்று வருகின்றது. சுமார் 60, 000 குடும்பங்கள் சுத்தமான குடிநீரை இழந்துள்ளன. வறட்சி காரணமாக இலட்சக்கணக்கான ஹெக்டயர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளது. விவசாயிகள் உட்பட ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

5,000 பாடசாலை ஆசிரியர்களும் ஏராளமான மருத்துவ நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் . இதனால், மருத்துவமனைகளின் வார்ட் தொகுதிகள் மூடப்பட்டு அறுவைச்சிகிச்சைகள் கூட இரத்து செய்யப்பட்டுள்ளன .

இந்நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு தேசிய ஒருமைப்பாடு மற்றும் இணக்கப்பாடு கொண்ட தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம்.

வீழ்ந்த நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இருந்தால், எதிர்க்கட்சியாக அனைவரும் அதிகபட்ச ஆதரவை வழங்க விரும்பினாலும் அவ்வாறான வேலைத்திட்டமொன்று தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை .

அரசாங்கம் விளையாடும் இந்த அரசியல் சூதாட்டங்களை தவிர்த்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். இதற்கான அறிவு அரசாங்கத்திற்கு இல்லையென்றால்,எதிர்க்கட்சியிடம் இருக்கும் இதற்குத் தேவையான அறிவையும், மனித வளத்தையும் வழங்க விரும்புகின்றோம்.

பதவிகளுக்கு அடிமைப்பட்டு நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுக்க நாம் தயாரில்லை. ,இது போன்ற தேசத்துரோக அரசியல் பேரங்களை நீங்கள் செய்ய விரும்பினால்,வேறு யாரையாவது பார்த்துக்கொள்ளுங்கள் ,நாட்டின் தேசிய நலனை புறந்தள்ளி விட்டு பெருந்தீனி அரசியலை பின்பற்ற ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை .” – என்றார்.

 

Related Articles

Latest Articles