நாடு வீழ்ந்தபோது சவாலை ஏற்காது தப்பியோடிய தலைவர்கள், மீண்டெழுந்துவரும் நாட்டை மறுபடியும் பின்நோக்கி இழுப்பதற்கு முற்படுகின்றனர் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு
“ இருண்ட யுகத்திலிருந்தே தற்போது முன்னோக்கி வந்துகொண்டிருக்கின்றோம். உயிர்கள் மற்றும் சொத்துகளுக்கு சேதம் விளைவித்து, சட்டத்தை கையிலெடுத்து செயற்பட்ட வன்முறைக்குழு தோல்வியடைந்து, ஜனநாயகத்தை மதிக்கும் சமூகம் உருவாகிவருகின்றது.
அன்று நாடு வீழ்ச்சியடைந்தபோது அதனை பொறுப்பேற்க முடியாது எனக் கூறிய தரப்பு அதேபோல சவால்களுக்கு மத்தியில் தப்பியோடிய தலைவர்கள் தற்போது மீண்டும் களத்துக்கு வந்து பல்வேறு நகைச்சுவை கதைகளைக்கூறிவருகின்றனர். தாம் தோல்வியடைவோம் என்பது அவர்களுக்கு தெரியும். எனினும், நாடு மீண்டெழ முடியாத வகையில் பின்நோக்கி இழுப்பதற்கு முற்படுகின்றனர்.
விமர்சனங்களை மட்டுமே முன்வைப்பதற்கு பழகியுள்ள வாய்ச்சொல் தலைவர்களால் நாட்டை மீட்க முடியுமா? முடியாது. சொல்லைவிட செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைவரே தற்போது தேவை. சவால்களை ஏற்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தரப்பின் பக்கமே மக்கள் நிற்க வேண்டும்.
கடல் அமைதியாக இருக்கும்போது அல்ல, புயல் ஏற்படும்போதுதான் மாலுமியின் உண்மையான திறமையை அறியமுடியும்.’’- என்றார்.
