இலங்கையின் 26ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
எமது நாடு மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் பயணத்துக்கொண்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக அனைத்து மட்டங்களிலும் நெருக்கடிகளும் சவால்களும் உச்சம் தொட்டுள்ளன. நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண பலம்வாய்ந்த மற்றும் சர்வதேச ரீதியாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவர் ஒருவர் அவசியமாகும். இன்றைய சூழலில் அதற்கு பொருத்தமான நபராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார் என்பதை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இலங்கையின் பிரதமராக 5 தடவைகள் அவர் பதவி வகித்துள்ளார். இவர் பிரதமராக பதவி வகித்த காலப்பகுதிகள் அனைத்தும் மிகவும் சவால்மிக்க காலப்பகுதிகளாகும். 1993ஆம் ஆண்டு, 2001ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நாட்டில் யுத்தச் சூழல் தலைத்தூக்கியிருந்தது. அனைத்தின மக்களுக்கும் சமாதானத்தை பெறுக்கொடுப்பதில் முக்கியமாக செயல்பட்ட தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பதை எவரும் மறந்துவிட முடியாது. புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்த சந்தர்ப்பதில் அதனைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டங்களை முறியடித்து சமாதானத்தை நிலைநாட்ட பாடுபட்டிருந்தார் என்பதை தமிழ் மக்களால் எழிதில் மறந்துவிட முடியாது.
2015ஆம் ஆண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்தான் மீண்டும் நாட்டை அவர் பெறுப்பேற்றார். அந்த சவால்களை வெற்றிக்கொண்டு நாட்டை வழமைக்கு கொண்டுவந்தார். கடந்த 2015-2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டு மக்களுக்கு பொருளாதார ரீதியான சுமைகள் இருக்கவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிகவும் குறைவாகவே இருந்தன. எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடுகள் இருக்கவில்லை. கடன்கள் உரிய காலத்தில் செலுத்தப்பட்டதுடன், அரச வருமானமும் அதிகரிக்கப்பட்டது.
மீண்டும் இக்கட்டான ஒரு சூழலில்தான் 6ஆவது தடவையாக அவர் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்த சவால்களையும் வெற்றிக்கொண்டு நாட்டை வழமைக்கு கொண்டுவருவார். மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமைகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் குறைக்கும் ஆளுமை அவரிடம் உள்ளது. இத்தருணத்தில் அவருக்குத் தேவையான பலத்தை மாத்திரமே மக்கள் வழங்க வேண்டியுள்ளது. குறிப்பாக மலையக அரசியல்வாதிகள் கட்சி பேதங்களை கடந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றி எமது மக்களுக்கான நன்மைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.