நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: ஒருவர் பலி: 20 பேர் காயம்

நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் லொறியொன்று கார் மற்றும் வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்றிரவு (01) இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று அதே திசையில் சென்ற கார் ஒன்றுடன் மோதி எதிர் திசையில் ஹட்டன் பகுதியில் இருந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வழியாக நுவரெலியா நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி இழுத்துச் சென்று மண்மேட்டில் மோதுண்டே விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியில் தடையாளி முறையாக இயங்காமை காரணமாக ஏற்பட்ட இயந்திர கோளாறே இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற வேனுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த 75 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் லொறி சாரதி மற்றும் வேனில் பயணித்தவர்கள் அடங்களாக 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles