நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து – இருவர் காயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ரதல்ல குறுக்கு வீதியில் நேற்றிரவு லொறியொன்று வீதியை விட்டு விலகி – கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர் என்று நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியில் நால்வர் பயணித்த நிலையில் அவர்களில் இருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிகவும் செங்குத்தான இவ்வீதியில் சிறிய வளைவு ஒன்றில் லொறி கட்டுப்பாட்டை இழந்து தேயிலை மலையில் விழுந்துள்ளது.

குறித்த வீதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வீதி செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், தகுந்த தடையாளிகளை பாவித்து வாகனங்களை செலுத்த வேண்டும் என பல அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒருசில கனரக வாகனங்கள் இவ்வீதியில் பயணித்துவருகின்றன.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles