நானுஓயா விபத்தில் பலியானோரில் ஐவரின் சடலங்கள் நல்லடக்கம்! பெருந்திரளான மக்கள் அணிதிரண்டு அஞ்சலி!!

நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று (21.01.2023) நள்ளிரவு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன்படி, வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோரின் பூதவுடல் நள்ளிரவு 12:10 மணியளவில் ஹட்டன் – டிக்கோயா ஜும்மா பள்ளிவாசலுக்கு கொண்டு வரப்பட்டது. பெருந்திரளான மக்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பள்ளிவாசலில் சடலங்கள் வைக்கப்பட்ட பின்னர், இஸ்லாமிய சம்பிரதாயப்படி முதலில் குடும்பத்தினர், பிறகு பெண்கள், பிறகு ஆண்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன்போது, ஐந்து சடலங்களிலும், முகங்கள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இறுதி அஞ்சலி செலுத்த அனுமதித்த பின்னர், அதிகாலை 3 மணியளவில் இஸ்லாமிய மத சடங்குகள் மற்றும் ஏனைய சடங்குகளின் பின்னர் சடலங்கள் அட்டன் டிக்கோயா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த இந்துக்களான வேன் சாரதி மற்றும் ஆட்டோ சாரதிகளுக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.

Related Articles

Latest Articles