“ வெனிசுவேலாவின் செயல் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்’ என்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்து, அந்நாட்டின் மீது ஜனவரி 3 ஆம் திகதி அமெரிக்கா போர் தொடுத்தது.
ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து, நாடுகடத்தினர்.
தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலாவில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை அமெரிக்கா நிர்வகிக்கும் என்றும், அந்நாட்டின் எண்ணெய் உற்பத்திக்கு அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஆனால், வெனிசுவேலாவின் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, அந்நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த டெல்சி ரோட்ரிகஸ், இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனிடையே, வெனிசுவேலாவுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கும் வகையில் கடந்த சில நாள்களாக ஜனாதிபதி டிரம்ப் உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், விக்கிபீடியா தளத்தில் ‘வெனிசுவேலா செயல் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்’ என்று அவரது புகைப்படத்துடன் இருக்கும் வகையில் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை ட்ரூத் சோசியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.










