அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் எவ்வித எண்ணமும் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்சவுக்கு இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஏதேனும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், 2029 ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சி சார்பில் லிமினி ராஜபக்ச களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் வழக்கு விசாரணை நேற்று முன்தினம் இடம்பெற்றபோது, நீதிமன்ற வளாகத்துக்கு லிமினி ராஜபக்ச வருகை தந்தமை தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளியாகின.
இது தொடர்பில் வினவியபோது பதிலளித்த டி.வி. சானக,
“மூவரடங்கிய விசேட நிரந்தர நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையின்போது பிணை பெறுவதற்கு, உரிய ஆவணங்களில் கையொப்பமிட மனைவி, சகோதரர் அல்லது நெருங்கிய உறவினர் ஒருவர் இருக்க வேண்டும். கடந்த காலங்களிலும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாகவே அவர் நீதிமன்றத்துக்கு வந்தார்.
எனக்குத் தெரிந்தவரையில், லிமினி ராஜபக்சவுக்கு அரசியலில் ஈடுபடும் எவ்வித எண்ணமும் இல்லை” என்றார்.
