சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான விஷ்ணு பிரதாப் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சுமார் 5 மணிநேரமாக நடத்திவந்த சோதனை நிறைவுபெற்றுள்ளது. சோதனையின் முடிவில் மொபைல் போன் மற்றும் புத்தகங்களை கைப்பற்றிச் சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பகை வென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரதாப். இவர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என்று கூறப்படும் நிலையில், இவர் தென்னகம் என்ற யூடியூப் சேனலை கடந்த 2020 டிசம்பர் 27 ஆம் திகதி முதல் நடத்தி வருகிறார். தனது யூடியூப் சேனலில் 279 வீடியோ பதிவுகளை பதிவிட்டுள்ள இவர், நாம் தமிழர் கட்சி செயல்பாடுகள் மற்றும் தமிழ் பற்றாளர்கள் குறித்து பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் இவரது வீட்டுக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்தச் சோதனை முற்பகல் 10 மணி அளவில் நிறைவுபெற்றது. இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் உள்ளனவா என 6 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இவருக்கு இலங்கைத் தமிழர்கள் உட்பட வேறு இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா, வெளிநாட்டிலிருந்து பணம் ஏதும் பெற்றுள்ளாரா என்பன குறித்து விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முற்பகல் 10 மணி அளவில் நிறைவுற்ற இச்சோதனையில் ஒரு மொபைல் போன் மற்றும் பிரபாகரன் அட்டைப்படத்துடன் கூடிய நான்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. என்ஐஏ சோதனையால் இளையான்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி – இந்து