யேமன் நாட்டில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அதனை பெற குவிந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதில் 85 பேர் உயிரிழந்தனர்.
யேமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர்.
இதனால், பழைய அரசை மீண்டும் கொண்டு வர சவூதி ஆதரவு பெற்ற கூட்டணி அரசும் முயற்சித்தது.
இந்த இரு நாடுகளின் மறைமுக போரால் அந்நாட்டில் படையினர் மற்றும் மக்கள் என 1.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இது, உலகின் மிக பெரிய மனித பேரிடரில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்நாட்டில் 3-ல் 2 பங்கு மக்கள் (2.1 கோடி) உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படுபவர்களாக உள்ளனர். அவர்களில் 1.7 கோடி மக்கள் வறுமையின் பிடியில் வாடுகின்றனர். இந்த நிலையில், யேமன் நாட்டின் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சிலர் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில், ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்க முடிவாகி இருந்தது. நிதியுதவியை பெற மக்கள் கூட்டம் பெருகி இருந்தது. இந்நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 85 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.










