” நினைவுத் தூபிகளை அழித்தொழித்து தமிழரின் உணர்வை அடக்க முடியாது”

” மாவீரர் துயிலும் இல்லங்களையும், நினைவுத் தூபிகளையும் இடித்தழிப்பதன்மூலம் தமிழ் மக்களின் உணர்வுகளையும் அழித்துவிடலாம் என அரசு, பாதுகாப்பு தரப்பினர் மற்றும் இவர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் காட்டிக்கொடுப்பாளர்களும் நினைத்துவிடக்கூடாது. தமிழ் இனத்தின் அரசியல் விடுதலைக்காக, பாதுகாப்புக்காக, சுதந்திரத்துக்காக சமராடி உயிரிழந்த போராளிகள் – தியாகிகள் – தமிழ்த் தேசியவாதிகள் – மாவீரர்களை நினைவுகூரி அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. அதனை தடுக்க முனையக்கூடாது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில்   நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துவதுபோல, ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை பயன்படுத்தி எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஒன்று கூடல்களுக்கு தடைவிதிக்கும் விதத்திலான புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு, கிழக்கெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும். மாவீரர்களும் உறவுகளும், தமிழ் மக்களும் தமது உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவார்கள்.  இந்நிலையில் புதிய சட்டத்தை பயன்படுத்தி நினைவேந்தல்களை அடக்குவதற்கான – ஒடுக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் நீதிமன்றங்களை நாடி, தடை உத்தரவுகளைப் பெற்று, அது தொடர்பான அறிவித்தலை நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்களுக்கு வழங்கிவருகின்றனர்.

போராளிகள், தியாகிகள், மாவீரர்கள், தமிழ்த் தேசியவாதிகளுக்கு ஒவ்வொரு தமிழனும் அஞ்சலி செலுத்தும் நாளில் திட்டமிட்ட அடிப்படையில் இப்படியொரு தடையை ஏற்படுத்தி முயற்சிக்கும் மிகக்கேவலமான அரசாட்சியே இங்கு நடக்கின்றது.

மன்னாரில் மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான பொதுச்சுடர் ஏற்றிவைக்கும் பீடம் காடையாளர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. நினைவு சின்னங்களை அடித்து நொறுக்குவதால் தமிழ் மக்களின் உணர்வுகளை அடக்கிவிடலாம் என அரசோ, பாதுகாப்பு பிரிவினரோ அல்லது அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் காட்டிக்கொடுப்பாளர்களோ நினைத்துவிடக்கூடாது.  அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

தமிழர்களின் போராட்ட வரலாற்றில் எங்கள்  மண்ணுக்காக, இனத்தின் விடுதலைக்காக, பாதுகாப்புக்காக, சுதந்திரத்துக்காக போராடி மடிந்தவர்களை  நினைவுகூருவதற்கான உரிமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்றது. அதனை நீங்கள் தடுக்க முற்படக்கூடாது. ” – என்றார்.

Related Articles

Latest Articles