நியூஸிலாந்தின் அதி முக்கிய பயங்கரவாத சந்தேக நபர்களில் ஒருவராக கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இலங்கை நபர் ஒருவர், இன்று பல்பொருள் அங்காடிக்குள் அப்பாவி மக்களின் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டபோது அங்கு விரைந்து சென்ற பொலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு புலம்பெயர்ந்தவர் என்று கூறப்படும் இலங்கையை சேர்ந்த குறிப்பிட்ட நபர், இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் அது தொடர்பான காணொலிகளை தேடுவதிலும் பகிர்வதிலும் கரிசனை கொண்டவராகவும் அடையாளம் காணப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவர் கத்திகள், துவக்குகளோடு தன்னை அடையாளப்படுத்தும் புகைப்படங்களை பகிரத்தொடங்கியதை அடுத்து, பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு, அண்மையில் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டவர் என்றும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், பொலீஸாரினால் இருபத்து நான்கு மணிநேரமும் கண்காணிக்கப்பட்டுவந்தார் என்றும் கூறப்படுகிறது.
இன்று வெள்ளிக்கிழமை ஓக்லண்டில் – நியூ லின் பல்பொருள் அங்காடிக்குள் சென்ற குறிப்பிட்ட நபர், அங்கிருந்த கத்தியொன்றை எடுத்து, பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தவர்களின் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இவர் மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பேர் கழுத்து – நெஞ்சு ஆகிய பகுதிகளில் படுகாயமடைந்துள்ளார்கள். ஆனால், 60 செக்கன்களுக்குள் சம்பவ இடத்துக்கு விரைந்த சென்ற பொலீஸார், தாக்குதல் மேற்கொண்ட நபர் மீது சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் செய்து, சுட்டுக்கொன்றனர்.
இரண்டு பொலீஸார் மேற்கொண்ட சுமார் ஐந்து வேட்டுக்களில் குறிப்பிட்ட நபர் சடலமாக வீழ்ந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு படுகாயமடைந்தவர்களில் மூவரின் நிலை மோசமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.