நெல்லை மாவட்டம் மானூர் அருகே நிலத் தகராறில் அண்ணன், தம்பி தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த நாஞ்சான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜ் என்பவருக்கும் அவரது உறவினரான அழகர்சாமி என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.
பிரச்சனைக்குரிய அந்த இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்காக ஜேசுராஜ் நடவடிக்கை எடுத்த போது அங்கு வந்த அழகர்சாமி குடும்பத்தினருக்கும் அவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
வாய்த்தகராறு முற்றி மோதலாக வெடித்த நிலையில், ஜேசுராஜ், அவரது தம்பி மரியராஜ், தங்கை வசந்தா உட்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இதில் ஜேசுராஜ், மரியராஜ், வசந்தா என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொலையான 3 பேரில் வசந்தா, தாலுகா அலுவலத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்துள்ளார். கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், நாஞ்சான்குளம் கிராமத்திலும் அரசு மருத்துவமனையிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.