நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) பகுதியில் சீனாவின் விண்கலம் தரையிறங்கியுள்ளது. இங்கிருந்து மண் துகள்களை பூமிக்கு கொண்டுவர இருக்கிறது. இது சாத்தியமானால், நிலவின் மறுபக்கத்திலிருந்து மண் துகள்களை எடுத்து வந்த முதல் நாடு என்கிற பெருமையை சீனா பெறும்.
பூமிக்கு இயற்கையாகவே அமைந்த துணை கோள்தான் நிலவு. ஆதி காலத்தில் நாட்களை அறிந்துக்கொள்ள மனிதன் நிலவை காலண்டராக பயன்படுத்தி வந்தான். மட்டுமல்லாது, பூமியில் இருக்கும் கடல் அலையை சீராக வைத்திருப்பதிலும், பூமியின் சுழற்சியை கட்டுப்படுத்துவதிலும் நிலவு முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே நிலவு குறித்த ஆய்வுகள் தொடக்கத்தில் தீவிரமடைந்திருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இந்த ஆய்வுகளுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இப்படி இருக்கையில்தான், இந்தியாவின் சந்திரயான் திட்டம் உலக நாடுகளின் கவனத்தை நிலவு பக்கம் திருப்பியது. யாருமே இதுவரை இறங்காத நிலவின் தென் துருவத்தில் விண்கலனை இறக்கி இந்தியா உலக சாதனையை படைத்தது. இதனையடுத்து நிலவு மீது ரஷ்யாவும், ஜப்பானும் அடுத்தடுத்து விண்கலன்களை அனுப்பின. ஆனால், இரண்டும் தோல்வியடைந்தது.
இருப்பினும் முயற்சியை கைவிடாமல் நிலவில் அணு உலையை அமைக்க ரஷ்யாவும், சீனாவும் முயன்று வருகின்றன. இது இரு நாடுகளின் கனவு திட்டம். மறுபுறம் சீனா மட்டும் மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. அதாவது, நிலவின் மற்றொரு பகுதியிலிருந்த மண்ணை பூமிக்கு கொண்டுவருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். சர்வதேச நாடுகளின் விண்கலன்கள் அனைத்தும் நிலவின் ஒரு பக்கத்தில்தான் தரையிறங்கியுள்ளன. அதாவது நிலவு பூமியை போல தன்னை தானே சுற்றுவதில்லை. பூமியை பார்த்தவாறு லாக் ஆகியிருக்கும். பூமியிலிருந்து நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். மற்றொரு பக்கத்தை பார்க்க முடியாது. எனவே இதுவரை மனிதர்கள் நடத்திய ஆராய்ச்சிகள் அனைத்தும் இந்த ஒரு பக்கத்தில்தான் நடத்தப்பட்டிருக்கிறது.
இப்படி இருக்கையில் மற்றொரு பக்கத்தின் மீதான ஆய்வை சீனா தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு ‘லாங் மார்ச்-5’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான ராக்கெட் தெற்கு ஹைனான் தீவில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து கடந்த மாதம் ஏவப்பட்டது. இதில் Chang’e-6 எனும் ஆய்வுக் கருவி இணைக்கப்பட்டிருக்கிறது.
தற்போது இந்த கருவி நிலவில் தரையிறங்கியுள்ளது. இது நிலவின் மறு பக்கத்திலிருந்து மண் மற்றும் கற்கள் துகளை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பும். இது சாத்தியமானால், நிலவின் மறுபக்கத்திலிருந்து மண் துகளை எடுத்து வரும் முதல் நாடு என்கிற பெருமையை சீனா பெறும். இந்த திட்டத்தில் பணிபுரியும் பிரெஞ்சு விஞ்ஞானி மெஸ்லின் கூறுகையில், “இவ்வளவு குறுகிய காலத்தில் சீனா எவ்வாறு இத்தகைய லட்சிய மற்றும் வெற்றிகரமான திட்டத்தை உருவாக்க முடிந்தது என்பது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
இந்த திட்டத்தில் பிரான்ஸ், இத்தாலி, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கெடுத்துள்ளனர். எனவே இந்த நாடுகளை சேர்ந்த சில கருவிகளும் இந்த நிலவுக்கு செல்லும் ராக்கெட்டில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வு மனித குல வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.