சீனாவில் இருந்து கடந்த மாதம் 24 ஆம் திகதி ஒரு விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறை துகள்களுடன் பூமிக்கு திரும்பியுள்ளது.
நிலவில் இருந்து பாறை துகள்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்காக சீனா ‘சேஞ்ச்5’ என்ற விண்கலத்தை கடந்த மாதம் 24 ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்த விண்கலம் கடந்த 1ஆம் திகதி நிலவை சென்றடைந்தது. பின்னர் விண்கலத்தில் இருந்து லேண்டர்அசென்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கு பாறைதுகள்கள், மண் மாதிரிகளை சேகரித்த லேண்டர்அசென்டர் நிலவு பரப்பிலிருந்து கடந்த 3 ஆம் திகதி புறப்பட்டு, நிலவைச் சுற்றிக்கொண்டிருந்த ‘சேஞ்ச்5’ விண்கலத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
இந்த நிலையில் நிலவை சுற்றி வந்து கொண்டிருந்த ‘சேஞ்ச்5’ விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டுள்ளதாக சீன தேசிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “நிலவைச் சுற்றி வந்துகொண்டிருந்த சேஞ்ச்5 விண்கலத்தின் பாதை பூமியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பப்பட்டது.
அந்த விண்கலத்திலிருந்த 4 என்ஜின்கள் 22 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டதில், அதன் சுற்றுவட்டப் பாதை பூமியை நோக்கித் திரும்பியது. இந்த விண்கலம் வியாழக்கிழமை அதிகாலை வேளையில் பூமிக்கு திரும்பியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்து வந்த 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய 2 நாடுகள் நிலவின் மாதிரிகளை சேகரித்து வந்து ஆராய்ச்சி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.