நிவாரணப் படகுகளை நடுக்கடலில் இடைமறித்த இஸ்ரேல்!

காசாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன் ஐரோப்பாவில் இருந்து வந்த படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறிந்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இந்தப் படகு பயணத்தில் இருந்தனர். ஆறு ஆஸ்திரேலியர்களும் சென்றுள்ளனர்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் சுமார் 500 செயற்பாட்டர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர்.

இந்தப் படகுகளில் சில புதன்கிழமை இரவு பாலஸ்தீன பிரதேசத்தை அடைந்தன.

அப்போது அதனை இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்துள்ளனர். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பயணித்த படகும் அடங்கும்.

இந்தப் படகு பயணத்தில் உள்ள சிரியஸ், அல்மா, அடாரா படகுகள் காசா கடற்கரையை நெருங்க சுமார் 80 மைல்கள் தொலைவு இருந்த நிலையில் இஸ்ரேல் கடற்படையினர் படகுகளை இடைமறித்துள்ளனர்.

அதை படகுகளில் பயணித்தவர்கள் சமூக வலைதள பதிவுகளில் பகிர்ந்து உறுதி செய்துள்ளனர். அப்போது ‘பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்’ என அவர்கள் முழங்கினர். ஏற்கெனவே இதே போல கடந்த ஜூன் மாதம் நிவாரண பொருட்களுடன் காசா நோக்கி வந்த படகுகளுக்கு இஸ்ரேல் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

“சுமார் 12-க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த இஸ்ரேல் கடற்படையினர், பாலஸ்தீன கடல் பரப்பை நெருங்கிய எங்கள் படகுகளை இடைமறித்தனர். நாங்கள் பயணித்த படகுகளின் இயக்கத்தை நிறுத்துமாறு அவர்கள் தெரிவித்தனர். அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை எங்களை காத்திருக்குமாறு கூறியுள்ளனர்.

இல்லையெனில் எங்களது படகுகள் கைப்பற்றபடும் என கூறியுள்ளனர். மேலும், அதற்கான விளைவுகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளனர்” என்று காசாவுக்கு உதவு பொருட்களுடன் படகில் சென்ற அமெரிக்கர் கிரேக் ஸ்டாகர் தெரிவித்துள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கிரெட்டா தன்பெர்க் மற்றும் அவரது நண்பர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளார்.

அந்தப் பதிவில் படகின் மேல்புறத்தில் கிரெட்டா தன்பெர்க் அமர்ந்துள்ளார். இந்த பயணத்தில் நெல்சன் மண்டேலாவின் பேரனும் பயணித்துள்ளார். அவர்களுடன் ஐரோப்பியாவை சேர்ந்த செயற்பாட்டாளர்களும் உள்ளனர்.

இஸ்ரேலின் நடவடிக்கை சில மணி நேரம் வரை தொடரும் என எதிர்பார்க்கிறோம். அவர்களது படகுகள் அனைத்தும் இஸ்ரேலின் அஸ்தோது நகரில் உள்ள துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படலாம். பின்னர் அங்கிருந்து அவர்கள் நாடு கடத்தப்படலாம் என இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த செயலுக்கு துருக்கி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்துக்கு எதிராக இஸ்ரேல் செயல்படுகிறது. நிவாரண உதவி பொருட்களுடன் படகுகளில் காசா சென்ற துருக்கி நாட்டினர் மற்றும் அவர்களுடன் உள்ளவர்களை உடனடியாக இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் என துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் படகுகளில் பயணித்தவர்களின் நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles