நீர்நிலைகளில் நீர் மட்டம் அதிகரிப்பு நீராடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை

மலையகத்தில் தொடரும் பெரும் மழை காரணமாக இப்பகுதியிலுள்ள நீர்நிலைகள் பெருக்கெடுத்து வருவதால் நீராடுவதை தவிர்த்து கொள்ளுமாறு பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் இப்பிரதேசவாசிகள் பொது மக்களை அறிவுறுத்துகின்றனர்.

பண்டிகைக் காலத்தில் இளைஞர்கள் இவற்றில் உல்லாசமாக நீராட வருவதால் ஆபத்துக்களில் சிக்கி உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இத்தினங்களில் இப்பிரதேச நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், குளங்களில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மேலும் இரத்தினபுரி வழியாக சிவனொளிபாத மலை செல்லும் யாத்திரிகர்கள் களுகங்கை உட்பட பல நீர்நிலைகளில் நீராடுவோர் கவனயீனம் காரணமாக உயிராபத்துக்களை எதிர்கொள்வதாக இரத்தினபுரி மாவட்ட நீர்வீழ்ச்சிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தினூடாக சிவனொளிபாத மலைக்குச் செல்லும் 3 வீதிகளிலும் களுகங்கை‌ வளவை கங்கையும் இவற்றின் கிளையாறுகளும் நீர்வீழ்ச்சிகளும் காணப்படுகின்றன. இவற்றின் நீரோட்டம் தற்போது அதிகரித்து வருவதால் பொது மக்களின் பாதுகாப்புக்கருதி அபாய அறிவுறுத்தல்களை இவர்கள் விடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles