நுரைச்சோலை அனல் மின் திட்டம்! ஏன் இத்தனை சிக்கல்?

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம்! இதனைக் கேட்டவுடன் ஐயோ அதுவா எப்போதும் உடைந்து கிடக்கிறது. சீனா உற்பத்தி அல்லவா என்ற சலிப்பும், கேலிப் பேச்சுக்களையும் கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. உண்மையில் நுரைச்சோலை அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டதால் இலங்கைக்கு நன்மை கிடைத்ததா? கிடைக்கிறதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

நுரைச்சோலை அனல் மின் திட்டம் அமைக்கப்படும் போது 900 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டது. ஒரு தொகுதியில் 300 மெகாவொட் வீதம் 900 மெகவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இலக்கு.

ஏன் இந்தத் திட்டம்?

இலங்கையில் நீர்மின் உற்பத்தியே ஆரம்பித்தில் இருந்தது. எதிர்காலத்தில் நீர்மின் உற்பத்திக்குப் பதிலாக அல்லது மாற்றீடாக மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற மதிப்பீடு இருந்தது. நீர்மின் உற்பத்தியைவிட குறைவான செலவில் அனல் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இதன்விளைவாகவே நுரைச்சோலை அனல் மின் திட்டம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. சீனக் குடியரசின் ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் உதவியுடன் இலங்கை மின்சார சபையின் முயற்சியாக இந்த அனல் மின் நிலையத்தை அமைக்கும் பணிகள் 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நுரைச்சோலையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும், முன்னதாக திருகோணமலையில் இதனை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால், அந்தப் பிரதேச மக்களின் எதிர்ப்பு மற்றும் வேறுசில சூழலியல் காரணங்களுக்காக புத்தளத்திற்கு இந்தத் திட்டம் மாற்றப்பட்டது.

ஏன் இத்தனை குழப்பம்?

நுரைச்சோலை அனல் மின் நிலையம் இலங்கையின் ஒரு தோல்வியடைந்த திட்டமாகவே கருதப்படுகிறது. நுரைச்சோலை அனல் மின் நிலையம் என்ற பெயரைக் கேட்டவுடன், ‘அது எப்போதும் உடைந்தே கிடக்கிறது’ என்று மக்கள் சொல்வதைப் கேட்க முடிகிறது. தேசிய மின் கட்டமைப்பில் நுரைச்சோலை அனல் மின் நிலையம் பங்களிப்பைச் செலுத்தினாலும், அடிக்கடி காலைவாறும் திட்டமாகவே இது இருக்கிறது. இந்த அனல் மின் நிலையம் பழுதடையும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனைத்தவிர சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்தத் திட்டம் இருக்கிறது. எதிர்காலத்தில் அனல் மின் நிலையங்கள் திறக்கப்படக்கூடாது என்ற தீர்மானத்தைப் பல நாடுகள் எடுத்துள்ளன. இலங்கையிலும் இந்தத் தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதிருக்கும் அனல் மின் நிலையத்தினால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு மிக அதிகம்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து ஆவியாகும் நச்சு அமிலங்களும், நிலக்கரி சாம்பலும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் அந்தப் பகுதி மக்களுக்கும் இது அச்சுறுத்தலாகவே இருக்கிறது.

இந்த அனல் மின் நிலையத்தினால் ஏற்பாடும் பாதிப்புக்களை சூழலியலாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் வாயுக்களினால் உயரமான மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இதனைத்தவிர, கடல் பகுதிகளிலும் அமிலத்தன்மை பரவி வருகிறது.

இந்த 900 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் உமிழ்வுகள் அனுமதிக்கப்பட்ட தரத்தை விட அதிகமாக உள்ளது. இதனால் அடிக்கடி ஏற்படும் செயலிழப்பு, இடைப்பட்ட செயற்பாடுகள் மற்றும் எதிர்பாராத விதமாக சாம்பலை திறந்த குழிகளில் சேமித்து வைத்தல் என பல நெருக்கடிகள் காணப்படுகின்றன.

மின் உற்பத்தி நிலையம் அதிகளவு திடக்கழிவுகள், வெப்பக் கழிவுகள் மற்றும் சூடான நீரை வெளியிடுவதால் நீர் மாசுபாடு ஆகியவற்றை உருவாக்குகிறது. இது நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த அனல் மின் நிலையத்திலிருந்து வெளிவரும் உமிழ்வுகள் சுற்றுச்சூழல் மற்றும் அங்கு வாழும் மக்கள் மீது குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்களை உருவாக்கியுள்ளன.

மூலப் பொருள் நிலக்கரியில் வைக்கப்பட்டுள்ள பொறி!

இந்த மின் உற்பத்தி நிலையத்தின் முக்கிய ஆற்றல், ஆதாரம் நிலக்கரி ஆகும். இது மிகவும் குறைந்துபோன வளமாகும். நிலக்கரிச் சிதைவு என்பது ஓர் உலகளாவிய வெளிப்பாடாகும். இது ஆற்றல் தேவைகளுக்காக புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருக்கும் அனைத்து நாடுகளாலும் உணரப்படுகிறது. கொதிகலன் நீர், மின்தேக்கி குளிரூட்டும் நீர் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு, மின் உற்பத்தி நிலையம் கடல் நீரைப் பயன்படுத்துகிறது. அதிக நீர் வெளியேற்ற விகிதத்தின் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள், நுண்ணுயிரிகள், முட்டைகள் மற்றும் கடல் விலங்குகளின் இனப்பெருக்கம் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்கு இது வழிவகுக்கும். அனல் மின் நிலையத்தை சூழவுள்ள பகுதிக்கு அருகில் கடல்வாழ் உயிரினங்கள் குறிப்பாக கடல் ஆமைகள் காணப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மொத்தம் ஏழு வகையான கடல் ஆமைகளில், ஐந்து ஆமைகள் புத்தளம்-கற்பிட்டி கரையோரப் பகுதியில் உள்ள கடற்கரையோரங்களில் முட்டையிடுவதாக மக்கள் கூறுகின்றனர்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி செயற்பாட்டின்போது உற்பத்தி செய்யப்படும் சாம்பல் மற்றும் கீழ் சாம்பல் ஆகியவை ஆலையின் முக்கிய சிக்கல்களாகும். முற்றமானது காற்றின் அரிப்பு மற்றும் கசிவு ஆகியவற்றுக்காக திறந்திருப்பதால், சாம்பல் திறந்தவெளியில் கொட்டுவது கவலைக்குரிய விடயமாகும். 10 மைக்ரோனை விட சிறியதாக இருப்பதால், காற்றினால் எளிதில் தூக்கிச் செல்லப்பட்டு, விவசாயத்தை சீர்குலைத்து, நீர் ஆதாரங்களை மாசுபடுத்தி, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தினால் கடல் வளம், சூழல் மற்றும் மனித குலத்துக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து நீண்ட காலமாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், அதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். இத்தனைப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தினால் நன்மைகளைவிட தீமைகளே அதிகமாக இருக்கின்றன. இந்த அனல் மின் நிலையம் அடிக்கடி காலை வாறுவதால் இருளில் இருக்க வேண்டிய நிலைமையும் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்தது. ஆகவே இதுவொரு தோல்வியடைந்த திட்டமாகவே பார்க்கப்படுகிறது.

ஒரு திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அதில் உள்ள நன்மை தீமைகள் ஆராயப்படுவதுண்டு. இதுபோன்ற மிகப் பாரிய திட்டமொன்று ஆரம்பிக்க முன்னர் நிச்சயம் அதன் பாதிப்பு அறிக்கையும் தயாரிக்கப்பட்டிருக்கும். இத்தனைப் பாதிப்புக்கள் ஏற்படும் என்று தெரிந்தும், இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? உண்மையில் இலங்கையின் பூகோள முக்கியத்தும் வாய்ந்த இலங்கையை தனது பிடிக்கும் வைத்திருக்கும் இன்னுமொரு முயற்சியா? அல்லது எப்போதும் சிக்கலில் வைத்திருப்பதற்கு விரிக்கப்பட்ட வலையா? என்பது பெரும் சந்தேகமாகவே இருக்கிறது. எவ்வாறாயினும், இத்தனை பாதிப்புக்களை ஏற்படுத்தும் அனல் மின் நிலையம் விரைவில் மூடப்பட வேண்டும் என்பதே சூழலியலாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆனால் அதற்கு முன்னர் மாற்றுத் திட்டங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. காற்றலை மின் உற்பத்தி, சூரிய மின் சக்தி ஆகிய தெரிவுகளுக்குச் செல்வதே இலங்கைக்குப் பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால் நுரைச்சோலை அனல் மின் நிலையம் என்பது இலங்கையை கடனில் சிக்கவைத்த பொறிமட்டுமல்லாது மக்களை இருளில் வைக்கும் ஒரு தோல்வியடைந்தத் திட்டமாகவே தற்போது மாறியுள்ளது.

Related Articles

Latest Articles