ஜக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் கீழ் இயங்கும் நுவரெலியா மாநகர சபை வெகு விரைவில் மொட்டு வசமாகலாம் என தெரியவருகின்றது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் நகர முதல்வருக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் இடையிலான இது தொடர்பான பேச்சுவார்த்தை நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது முன்னாள் நகர முதல்வரை நியமனத்தின் மூலமாக உள்வாங்குவது எனவும் அதற்கு தற்பொழுது மாநகர சபை உறுப்பினராக பதவி வகிக்கின்ற ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரியவருகின்றது.
கடந்த காலங்களில் நுவரெலியா மாநகர சபையின் செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றது.அதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது ஜக்கிய தேசிய கட்சியின் மாநகர சபையாக இருப்பதே.இந்த நிலைமை தொடருமானால் நுவரெலியா அபிவிருத்தி என்பது கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும்.
எனவே நுவரெலியா மாநகர சபை ஆட்சியானது மொட்டுகட்சி வசமானால் அபிவிருத்தி மிக விரைவாக முன்னெடுக்க முடியும் என மாநகர சபை உறுப்பினர்களும் பொது மக்களும் கருதுகின்றனர்.
தற்பொழுது நுவரெலியா மாநகர சபையில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பாக 13 உறுப்பினர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக 2 உறுப்பினர்களும் பொதுஜன பெரமுன சார்பாக 6 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பாக 2 உறுப்பினர்களுமாக மொத்தமாக 23 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
ஆளும் ஜக்கிய தேசிய கட்சி சார்பாக 13 உறுப்பினர்களும் எதிர்கட்சிகள் சார்பாக 10 உறுப்பினர்களும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.நடைபெற்று முடிவடைந்த பாராளுமன்ற தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பாக பிரதிநிதித்துவம் செய்த மூன்று உறுப்பினர்கள் மாற்று கட்சிகளுக்கு தமது ஆதரவை தெரிவித்ததுடன் தேர்தல் பிராசாரங்களிலும் நேரடியாக ஈடுபட்டனர்.
இந்த மூவரில் ஒருவர் சுயேச்சை குழுவில் போட்டியிட்டனர்.எனவே இந்த மூவருக்கும் எதிராக ஜக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுக்குமானால் அவர்கள் அரசாங்கத்திற்கு தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க முன்வரலாம்.அவ்வாறான ஒரு நிலையில் எதிர்கட்சிக்கு 13 அங்கத்தவர்கள் அமர்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
இவ்வாறான ஒரு நிலையில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை எதிர்கட்சிகள் பெற்றுக் கொள்ளும்.இதன்போது ஜக்கிய தேசிய கட்சியை அங்கத்துவம் செய்கின்ற இன்னும் ஒரு சில உறுப்பினர்களும் மொட்டு கட்சிக்கு தங்களுடைய ஆதரவை வழங்கலாம்.அவ்வாறான ஒரு நிலையில் மொட்டு கட்சி ஆட்சி அமைப்பதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கின்றது.மிகவிரைவில் இந்த மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு