நுவரெலியாவின் பழமையான தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அரசு முன்னெடுத்துவரும் முயற்சிக்கு எதிராக நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று தபால் ஊழியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்பினர் தெரிவித்தனர்.
நுவரெலியா தபால் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு கூறினர்.
நுவரெலியா தபால் நிலைய வளாகத்தில் புதிய ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த 6 முதல் 7 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் , தற்போது இவ் வேலை திட்டம் தீவிரமடைந்துள்ளது. இதற்கு எதிராக நுவரெலியா நகரில் உள்ள ஏழுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இணைந்து இவ் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன எனவும், அதற்கு அனைவரும் இணைந்து ஆதரவினை வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்து விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலும் கடமைகளுக்கு சமுகளிக்காது நுவரெலியா தபால் பணியாளர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா நகரத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் ( 09) வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
செ.திவாகரன் டி.சந்ரு
