கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நுவரெலியா அரலிய விடுதி குழுமத்தின் சார்பில் 500 கிலோகிராம் எடையிலான பிரமாண்ட கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் பாரம்பரிய நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
நுவரெலியா அரலிய கிரீன் ஹில்ஸ், அரலிய கிரீன் சிட்டி மற்றும் அரலிய ரெட் ஆகிய மூன்று நட்சத்திர விடுதிகளின் ஊழியர்கள் பங்கேற்ற வண்ணமயமான இசை வாத்திய அணிவகுப்புடன் இந்நிகழ்வு தொடங்கியது.
கேக் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் உலர் பழங்கள் மற்றும் உயர்தர மதுபானங்களை ஏந்தியவாறு, ஊழியர்கள் நுவரெலியா பிரதான நகர வீதிகள் வழியாக நடைபவனியாகச் சென்று கிரகரி வாவிக் கரையை அடைந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் கேக் கலவை தயாரிக்கும் பணி தொடங்கியது.
இக்கலவையில் முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பேரிச்சை, செர்ரி, உலர் ஆப்ரிகாட் உள்ளிட்ட பல்வேறு உலர் பழங்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் உயர்தர மதுபானங்கள் சேர்க்கப்பட்டன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்குச் சில நாட்களுக்கு முன்பாக இக்கலவை நன்கு ஊறி நறுமணமும் சுவையும் பெறுவதற்காகத் தயார்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வு குறித்து அரலிய விடுதி குழுமத்தின் பொது மேலாளர் தினேஷ் கருத்து தெரிவிக்கையில்:
“கிறிஸ்தவ மக்களின் புனிதப் பண்டிகையான கிறிஸ்துமஸில் கேக் முக்கிய இடம் பெறுகிறது. இதற்காக நட்சத்திர விடுதிகளில் உலர் பழங்கள் மற்றும் மதுபானங்களைக் கொண்டு கேக் கலவை தயாரிப்பது வழக்கம். எமது விடுதியிலும் இதனை ஒரு பாரம்பரிய நிகழ்வாக ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தி வருகிறோம்.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கலவை, 10 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் கிளறப்பட்டு பதப்படுத்தப்படும். டிசம்பர் 20 ஆம் திகதிக்குள் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து, டிசம்பர் 24 ஆம் திகதி இரவு பிரமாண்டமான கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும்” என்றார்.
அரலிய விடுதி குழுமத்தின் தலைமைச் சமையல்கலை நிபுணர் திரு. சஞ்சுவ பிரேமதுங்க கூறுகையில்:
“இந்த 500 கிலோ கேக் கலவைக்காக 18 போத்தல் பிராந்தி, 10 போத்தல் ஒயின், பல்வேறு வகையான உலர் பழங்கள், இஞ்சி விழுது உட்பட கேக் தயாரிப்பிற்குப் பயன்படும் 25 விலையுயர்ந்த உயர்தரப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
வண்ணமயமான இந்த நிகழ்வில் விடுதியில் தங்கியிருந்த ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுடன், இது தங்களுக்கு ஒரு மறக்க முடியாத புதுமையான அனுபவமாக இருந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.










