நுவரெலியா தபால் நிலையத்துக்கு புதிய இருமாடிக் கட்டிடம்; அடிக்கல் நாட்டினார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

தொல்பொருள் நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கப்படும் நுவரெலியா தபால் நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளின் ஒரு பகுதியாக, பிராந்திய அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் அஞ்சல் செயற்பாட்டுப் பிரிவுக்காக அமைக்கப்படவுள்ள புதிய இருமாடிக் கட்டிடத்துக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (05) அடிக்கல் நாட்டினார்.

இதன்போது, நுவரெலியா தபால் நிலையக் கட்டிடத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நவீனமயமாக்கல் பணிகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

நுவரெலியா ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவதால், அங்கு அதிகரித்து வரும் தேவைகளைக் கருத்திற்கொண்டு தபால் நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விரிவான தகவல்களைக் கேட்டறிந்தார்.

புதிய இருமாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 78.34 மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

காலனித்துவ காலத்தில் ஐரோப்பியக் கட்டடக்கலை அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தின் தொன்மை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் பாதுகாக்கப்படும் வகையில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, அஞ்சல் மா அதிபர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர், மாநகர சபை முதல்வர், அரச அதிகாரிகள் மற்றும் தபால் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles