நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியாவில் பிரதான நகரின் அடையாளமாக அமைந்துள்ள நுவரெலியா தபால் நிலையத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டல் நிறுவனத்துக்கு ஒப்படைக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள் ,
சட்டத்தரணிகள் என பலரும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நுவரெலியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, வர்த்தகர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆட்டோ சாரதிகளும் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.
நுவரெலியா நகரில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துடன் நுவரெலியா பிரதான நகரில் உள்ள வீதிகளில் பேரணியாக சென்று பெருந்திரளானவர்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
குறித்த போராட்டம் காரணமாக நுவரெலியா பிரதான நகருக்கான வீதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலயம் தடைப்பட்டு இருந்தது .
போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செ.திவாகரன் டி.சந்ரு
