நுவரெலியா பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், 20 மேலதிக வாக்குகளால் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில், சபையின் நானுஓயா பிரதான காரியாலயக் கூட்ட மண்டபத்தில் இன்று முற்பகல் 10.58 மணியளவில் ஆரம்பமானது.
இதன் போது, ராகலையில் கடந்த 08ஆம் திகதி தீ விபத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கு, ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது, சபையில் உறுப்பினர்களாக நியமனம் பெற்றுள்ள 23 பேரில் 21 உறுப்பினர்கள் மாத்திரமே சமூகமளித்திருந்தனர்.

சபை உறுப்பினர்களான எஸ்.நித்தியகலா மற்றும் ஆர்.தமிழ்செல்வன் ஆகிய இரு உறுப்பினர்கள், தமது விடுமுறைக்கான கடிதங்களை சபை செயலாளர் சுனில் வட்டலியத்தவுக்கு கடிதமூலம் அனுப்பியிருந்த நிலையில் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
அதேசமயத்தில், சபை தவிசாளர் வேலு யோகராஜ் 2022 ஆண்டுக்கானவரவு -செலவுத் திட்ட அறிக்கையை சபை உறுப்பினர்களின் கவனதுக்குக் கொண்டுவந்தார்.
இதன்போது, அவ்வறிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறு திருத்தங்கள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் திருத்தம் செய்யப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது, எதிர்க் கட்சியான ஐ.தே.க உறுப்பினர் சி.பி.எம்.உயங்கொட, இந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்த நிலையில், 20 மேலதிக வாக்குகளால், வரவு – செலவுத திட்டம் நிறைவேற்றப்பட்டது.
டி.சந்ரு










