அரசின் புதிய கல்வித்திட்டத்திற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் இருந்துவரும் இரு கல்வி வலயங்களை மூன்று கல்வி வலயங்களாக மாற்றுவதுடன், தகைமையுள்ள ஆசிரியர்களை வலயம் மற்றும் கோட்டக்கல்வி அலுவலகங்ளில் நிருவாக சேவைகளுக்கு தெரிவு செய்ய வேண்டுமென்று, கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் கோரியுள்ளார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், மத்திய மாகாண ஆளுனர் லலித் யு. கமகேவிற்கு அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார்.
இக் கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘நுவரெலியா, ஹற்றன் ஆகிய பகுதிகளில் இரு கல்வி வலயங்களே இருந்து வருகின்றன. இவை மூன்று கல்வி வலயங்களாக மாற்றப்படல் வேண்டும்.
நுவரெலியா பிரதேச பாடசாலைகள் ஒரு கல்வி வலயமாகவும், தலவாக்கலை, ஹற்றன் பிரதேசங்களுக்கு ஒரு கல்வி வலயமாகவும், நோர்வூட் பிரதேசத்திற்கு ஒரு கல்வி வலயமாகவும் மூன்று கல்வி வலயங்கள் அமைய வேண்டும்.
நுவரெலியா மாவட்டத்தில் பெருமளவில் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும், உரிய வகையில் தமிழ்க் கல்வித்துறைக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அரசின் புதிய கல்வித்திட்டத்திற்கமைய தமிழ்க் கல்வித் துறைக்கு முன்னேற்றகரமான மாற்றத்தினை ஏற்படுத்தியாக வேண்டும் அதற்கான தருணம் தற்போது கிடைத்துள்ளது.
இம் மாவட்டத்தின் தமிழ்க் கல்வித் துறைக்கு வழங்கப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்து திருப்திப் பட முடியாது. ஜனாதிபதி எனக்கு கல்வி இராஜாங்க அமைச்சினை வழங்கும் போது பெருந்தோட்டப்பகுதி தமிழ் பாடசாலைகளின் மேம்பாடுகள் விடயமாக கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டுமென்று எனக்கு அறிவுறுத்தல் கொடுத்ததையும் இங்கு நினைவு கூர வேண்டியுள்ளது.
தமிழ்க் கல்விப் பணிப்பாளர்களாக கடமையாற்றக் கூடிய தகுதியுள்ளவர்கள் பலர் இருந்து வருகின்றனர்.
இத்தகையவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அப் பதவிகள் வழங்கப்படல் வேண்டும். ஆகவே உரிய நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்வீர்களென எதிர்பார்கின்றேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.










