நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக லிட்றோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நிறுவனத்தின் மாவட்ட விநியோகஸ்தர்கள் சில பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போதியளவு விநியோகிக்கப்படவில்லை என்றும் அதன் காரணமாக தமது வாடிக்கையாளர்களுக்கு தேவையான சிலிண்டர்கள் வழங்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக லிந்துலை . அக்கரப்பத்தனை . தலவாக்கலை . வட்டகொட . பத்தனை . கொட்டகலை . டயகம ஆகிய நகரங்களில் உள்ள விற்பனை நிலையங்களில் போதியளவு சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாகவே லிட்றோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலைக்கு வாடிக்கையாளர்கள் முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை அரசாங்கத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கிய போதிலும் இன்றுவரை குறித்த சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை அந்த நிறுவனம் முன்னெடுக்க மையின் காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு சிரமங்களுக்கு பொதுமக்கள் உன் கொடுத்து வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க நுவரெலியா மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவி வருவதன் காரணமாக தலவாக்கலை லிந்துலை அக்கரப்பத்தனை போன்ற நகரங்களிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் லிட்றோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூபாய் 2,000 வரை அதிகரித்து விற்பனை செய்து வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அதேபோல் சில வர்த்தகர்கள் சிலிண்டர்களை பதுக்கி வைத்து தமக்கு தேவையான வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் வினியோகிப்பது ஆகவும் மேலும் சில இன்னும் சில நாட்களில் சிலிண்டர்களுக்கான விலை அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் பதுக்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே பொதுமக்களுக்கு தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி முறையாக குறித்த நிறுவனங்கள் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அதைப்போல் பதுக்கல் வேலைகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரத்தை உடனடியாக ரத்து செய்வதற்கான நடவடிக்கை களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும் மக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கௌசல்யா










