மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை தொடர்கின்றது.
தொடர் மழையால் மேல் கொத்மலை, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான,கா சல்ரி, விமலசுரேந்திர, மவுசாகலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது. நீரேந்தும் பிரதேசங்களில் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன.
அத்துடன், மழை தொடர்வதால் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா வீதிகளில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. கடும் பனிமூட்டமும் நிலவுகின்றது.
இதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீரக்க காலநிலையிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். சில தோட்டங்களில் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக தொழிலாளர்களின் வருகை மிக குறைவாக காணப்படுவதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்