நுவரெலியா மாவட்டத்தில் 26 ஆயிரத்து 690 குடும்பங்களுக்கே 2000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அதற்கான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 ரூபா வாழ்வாதாரக் கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்து, அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துவருகின்றது.
சமுர்த்தி, முதியோர் கொடுப்பனவு உட்பட மாதாந்தம் அரசாங்க கொடுப்பனவுகளை பெறுவோர் 2000 ரூபாவுக்கான பட்டியலில் இம்முறை சேர்க்கப்படவில்லை. நாளாந்த வருமானத்தை இழந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 26, 690 பேருக்கான நிதியே ஒதுக்கப்பட்டு நிவாரணமாக 2000 வழங்கப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவின் ஊடாக இன்றும், நாளையும் கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளது.” – என்றார் ரமேஷ்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்
