கடந்த ஆட்சி காலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் தன்னிச்சையாக நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியுள்ளதாக கிடைக்கும் தகவல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என காணி மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழு மூலம் எந்த அரசியல்வாதிகளுக்கும் உத்தியோகபூர்வமாக காணி வழங்கப்பட்ட தகவல்கள் தற்போது காணப்படும் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் அவ்வாறு அரசியல்வாதிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆரச்சி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் அரவிந்த செனரத் இவ்வாறு தெரிவித்தார்.
மஞ்சுள சுரவீர எம்.பி தனது கேள்வியின்போது, பெருமளவு காணிகள் கடந்த அரசாங்க காலத்தில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அம்பகமுவ வேவல்தலாவ பிரதேசத்தில் 50 ஏக்கர் காணிகளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் கையகப்படுத்தியுள்ளார்.
கொத்மலை கிழக்கு புரட்டொப் என்ற தோட்டப் பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் 16 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியுள்ளார்.
தலவாக்கலை பகுதியில் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 50 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் மாகஸ்தொட்டை பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே மூன்று இடங்களில் தலா 10 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் காணி ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வ காணி வழங்கள் பட்டியலில் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா? அவ்வாறில்லாவிட்டால் அது தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன? என அவர் கேள்வி எழுப்பினார்.
