நுவரெலியா மாவட்டத்தில் நேற்றுவரை 89 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 25 பேர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்கள் எனவும் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க இன்று (24.11.2020) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 2 ஆயிரத்து 442 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் 89 தொற்றாளர்கள் நேற்றுவரை அடையாளம் காணப்பட்டனர். இதில் 28 பேர் கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து வந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு உட்பட கொரோனா வைரஸ் வேகமாக பரவும் பகுதிகளில் இருந்து வெளியிடங்களுக்கு வரவேண்டாம் என தீபாவளி பண்டிகைக்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டது. தடுப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி வருகையை கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. எனினும், அதற்கு முன்பாக வந்தவர்களிடம் தற்போது பரிசோதனை நடத்தப்பட்டுவருகின்றன.
அதேவேளை, கொழும்பில் இருந்து தற்போதும் தோட்டப்பகுதிகளுக்கு மக்கள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்களிடம் கலுகல்ல பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் வைத்தே பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெறும் நடவடிக்கை சனிக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. சனிக்கிழமை 50 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டன. மூவருக்கு தொற்று உறுதியானது.இது நூற்றுக்கு 3 சதவீதமாகும்.
அதேபோல கண்டி, நுவரெலியா வீதியில் எல்பொட பகுதியில் உள்ள சோதனைச்சாவடியிலும் இன்று முதல் இவ்வாறு பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும். இதற்காக விடேச குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தோட்டப்பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதைக்கட்டுப்படுத்தவே நாம் இவ்வாறு செயற்படுகின்றோம். மக்களும் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும்.” – என்றார்
க.கிசாந்தன்










