நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கண் வெண்புரை நீக்கும் சத்திரசிகிச்சைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சைகளின் பின்னர் 10 நோயாளர்களின் கண்பார்வை குறைவடைந்தது.
அன்றைய தினத்தில் 34 நோயாளர்களுக்கு கண் வெண்புரை நீக்கும் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. சிலர் கண்டி மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
அத்துடன், கண் வெண்புரை நீக்கும் சத்திர சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. விசாரணைகளும் ஆரம்பமாகின.
சிகிச்சைகளின் பின்னர் பயன்படுத்தப்பட்ட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகையான கண் சொட்டு மருந்தாலேயே தொற்று ஏற்பட்டு நோயாளிகள் பாதிக்கப்பட்டிருந்தனர் என தெரியவந்தது.
இதனையடுத்து நேற்று 17 முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்து தொகுதியினை முற்றாக அகற்றி , அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அறைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் உபகரணங்களிலுள்ள கிருமி தொற்றுகளை அகற்றி மீண்டும், கண் வெண்புரை நீக்கும் சத்திரசிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மஹேந்திர செனவிரட்ன தெரிவித்தார்.
நானுஓயா நிருபர்
