நேர்மையுடன் செயற்படுங்கள் – சமாதான நீதவான்களுக்கு அரவிந்தகுமார் அறிவுரை

தொழில் செய்கின்ற போதிலும், தொழிலிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் நிலையிலும், மனதிற்கு திருப்தியினை ஏற்படுத்துவது சமாதான நீதவான் நியமனங்களாகும். அத்தகைய இப் பதவிகளை, மிக மிக நேர்மையுடன், முன்னெடுக்க வேண்டுமென்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் பதுளைப் பணியகத்தில் நடைபெற்ற, சமாதான நீதவான் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் கலந்து கொண்டு பேசுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆன்மீகம், கல்வி, சமூகசேவை ஆகியவைகளினடிப்படையில் சிறப்பான சேவைகளை மேற்கொள்ளும் பலருக்கு, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் சிபாரிசின் ஊடாக, நிதி அமைச்சினால் சமாதான நீதவான் நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வில், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தொடர்ந்து பேசுகையில், ‘தொழில் செய்கின்ற வேளையில், தொழிலில் திருப்திக்கண்டு வந்த போதிலும், தொழிலிலிருந்து ஓய்வுபெற்றதும் தமக்கு சேவையாற்ற முடியவில்லையே, தம்மை எவரும் நாடி வருகின்றார்களில்லையே என்ற தாக்கம் இருந்து வரும் அவ்வேளையில் சமாதான நீதவான் நியமனங்கள் ஆறுதல்களைக் கொடுக்கும்.

இந் நியமனங்கள் இருக்கும் போது, மக்கள் தத்தமது பல்வேறு விடயங்களுக்காக சமாதான நீதவான்களின் உறுதிப்படுத்தல் கையொப்பங்களைப் பெற்றுக்கொள்வதற்கு, சமாதான நீதவான்களை நாடி வரவேண்டியதும், காலத்தின் தேவையாக இருந்து வருகின்றது. நாம் ஓய்வு பெற்றிருந்த வேளையிலும், தம்மை நாடி வரும் மக்கள் வருவது; சேவைகளைப் பெற்றுச் செல்வது, மனதிற்கு பூரண திருப்தியினைத் தருகின்றது. அத்துடன் சமாதான நீதவான்களின் சேவையானது பொறுப்புமிக்கதோர் உன்னத சேவையாகும். இச் சேவைக்கு எத்தகைய களங்கத்தினையோ, மாசினையோ ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது.

கடந்த காலங்களில், தகுதியற்ற சிலருக்கும் சமாதான நீதவான் நியமனங்கள் சென்றடைந்துள்ளன. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் சகல விடயங்களிலும் தகுதியுடையவர்களை தெரிவு செய்து, அத்தகையவர்களை சிபாரிசு செய்து, சமாதான நீதவான் நியமனங்களைப் பெற்றுக்கொடுத்து வருகின்றேன்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக நான் இருந்து வந்த போதிலும், சகல விடயங்களிலும் தகுதியான, இலைமறை காய்கள் போல இருப்பவர்களை அடையாளங்கண்டு, அவர்களுக்கு இந்நியமனங்களைப் பெற்றுக்கொடுத்து வருகின்றேன். அவர்கள் நாட்டில் எந்தவொரு பிரதேசத்தினை சேர்ந்தவரானாலும், தகுதியானவர்களுக்கு பொறுப்பான நியமனங்கள் சென்றடைய வேண்டுமென்பதில், நான் கூடிய கவனம் செலுத்தி வருகின்றேன். இது விடயத்திலும், நான் அரசியலை கருத்தில் கொள்வதில்லை.

இந்நியமனங்களின் மூலம், வாழ்க்கையின் ஒரு படியினை நியமனங்கள் பெற்றவர்களுக்கு உயர்த்தி கொடுத்துள்ளேன். வாழ்நாளில் தமக்கு இந்நியமனங்கள் வழங்கிய போதிலும், கல்லறைக்கு சென்ற பின்பும், எமது பெயருக்கு பின்னால், இந்த கௌரவப்பட்டங்கள் எம்முடனேயே இருக்கும்.
ஆகவே, இந் சமாதான நீதவான் நியமன சேவைகளை திறம்பட செய்து, அனைவரது ஆதரவைகளை பெறுவதற்கும் நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோமாக’ என்றார்.

Related Articles

Latest Articles