நோய் அறிகுறியற்ற தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க திட்டம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளபோதிலும் ‘ஒட்சீசனுக்கு’ எவ்வித தட்டுப்பாடும் ஏற்படவில்லை. அதேபோல நோய் அறிகுறிகள் தென்படாத தொற்றாளர்களுக்கு வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்கும் நடைமுறை தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது நாட்டில் மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண மேலும் கூறியவை வருமாறு,

“ தேவையானளவு ஒட்சீசன் கையிருப்பில் உள்ளதால் அது தொடர்பில் வீண் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை. வைத்தியசாலைகளில் உள்ள கட்டில்கள் தொடர்பில் சில பிரதேசங்களில் நெருக்கடி நிலை காணப்படுகின்றது. அதேபோல தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும் உண்மைதான்.

எனவே, தொற்றாளர்கள் அதிகளவு அடையாளம் காணப்படும் பகுதிகளில், நோய் அறிகுறிகள் தென்படாதவர்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சையளிப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டில் ஏனைய பகுதிகளிலும் இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு எதிர்ப்பார்க்கின்றது.

நாட்டில் தற்போது உயிரிழப்பவர்களில் 90 வீதமானோர் தடுப்பூசி பெறாதவர்கள். அதேபோல நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே, தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தடுப்பூசி மத்திய நிலையத்துக்கு செல்ல முடியாதவர்களுக்கு வீடுகளுக்கே வந்து செலுத்தப்படும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி பெறவேண்டியது உங்களின் பொறுப்பு.” – என்றார்.

Related Articles

Latest Articles