” அதிபர் – ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு, பிழையான தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்புவதற்கு முற்படுகின்றது. எனவே, உண்மை நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பகிரங்க விவாதத்துக்கு வருமாறு உப குழுவுக்கு சவால் விடுக்கின்றோம்.”
இவ்வாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
அமைச்சர்களான விமல்வீரவன்ச, மஹிந்த அமரவீர ஆகியோரால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின்போது முன்வைக்கப்பட்ட கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மஹிந்த ஜயசிங்க மேலும் கூறியவை வருமாறு,
” அமைச்சர்களான விமல்வீரவன்ச, மஹிந்த அமரவீர ஆகியோர் மக்களை திசைதிருப்பும் வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். மூடி மறைக்காமல் உண்மையை கூறுமாறு வலியுறுத்துகின்றோம். 40 ஆயிரம் ரூபா 50 ஆயிரமாக அதிகரிக்கின்றது என்றெல்லாம் அறிவித்தனர். எனவே, உண்மையாகவே எவ்வளவு சம்பளம், எப்படி அதிகரிக்கப்படும் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.
அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடப்படவில்லை. எனவே, மக்கள் மத்தியில் பிழையான கருத்து பரப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.
நாம் முழு இறாத்தல் இறைச்சியையும் கேட்பதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு இறாத்தல் இறைச்சியை நான்காக பிரித்து அதில் ஒரு பங்கை வழங்குவதற்கே முற்படுகின்றனர். கணக்கு தொடர்பில் அவர்களுக்கு உள்ள தெளிவு என்னவென்பது மக்களுக்கு தெரியும். எனவே, பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால் விடுக்கின்றோம்.
சுபோதினி அறிக்கையின் பிரகாரம் ஒரே தடவையில் நியாயமான தீர்வை கோரினோம். முழு இறாத்தல் இறைச்சியை கேட்கவில்லை. அமைச்சர்கள்தான் பொய்யுரைக்கின்றனர். 2018 இல் முன்வைக்கப்பட்ட அறிக்கையை திருத்தமின்றி முன்வைத்துள்ளனர்.” – என்றார்.