பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்தாண்டு பங்களாதேசில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் பங்களாதேசை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உட்பட ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து, அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐ.ஜி., ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், ஷேக் ஹசீனாவுக்கான தண்டனையை இன்று (நவ., 17) அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது.
மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதனால் இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளார்.

* மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை ஷேக் ஹசீனா செய்துள்ளார். அவரது ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது.

* அதிகாரத்தில் நீடிக்க ஷேக் ஹசீனா அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார். அவர், போராட்டக்காரர்களை கொல்ல ஹெலிகாப்டர் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டு இருக்கிறார்.

* போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. போராட்டக்காரர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

* ஷேக் ஹசீனா போராட்டக்காரர்களை தூண்டிவிட்டார். அவர்களை அவர் களங்கப்படுத்தினார்.

இவ்வாறு சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை

ஷேக் ஹசீனா தற்பொழுது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வழக்கு விசாரணையின் போது வாதங்கள் முன்வைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் மரண தண்டனை விதித்து, சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

Related Articles

Latest Articles