‘பசறை தமிழ் தேசிய பாடசாலையின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கின்றது’

பசறை பிரதேசத்தின் தாய்ப் பாடசாலையாக விளங்கும் பசறை தமிழ் தேசிய பாடசாலை உயர்தர மாணவர்களின் பல்கலைகழக கல்வி வாய்ப்பை உறுதி செய்வதில் சிறந்த அடித்தளத்துடன் செயற்பட ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதோடு, பசறை பிரதேசத்தின் கல்வி வளர்ச்சி குறித்தும் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக பசறை பிரதேச சபை உறுப்பினர் கார்த்தீஸ்வரன் (ஈசன்) தெரிவிக்கின்றார்.

பசறை தமிழ் தேசிய பாடசாலையிலிருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவரது உரையில் ;2000 மாம் ஆண்டின் முற்பகுதியில் இப் பாடசாலையில் இருந்து ஓரிரு மாணவர்களே பல்கலைகழகத்திற்கு தெரிவாகினர். எனினும் இவ்வருடம் ஐந்து மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியிருப்பது பாடசாலையின் கல்வி வளர்ச்சியையும் ஆசிரியர், மாணவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பையும் எமக்கு எடுத்து காட்டுகின்றது.

மலையகத்தில் திறமையான மாணவர்கள் பலர் இருந்தாலும் அவர்களது குடும்ப சூழ்நிலை அவர்களின் கற்றலுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது. குறிப்பாக தோட்டங்களை அண்டி உள்ள மதுபானசாலைகளும், சட்ட விரோத மதுபான விற்பனை நிலையங்களும் தோட்டங்களில் வசிக்கும் குடும்பத் தலைவர்களின் உழைப்பில் பெரும் பகுதியை சுரண்டி விடுகின்றன. இதன்காரணமாக குடும்பத் தலைவிகளான தாய்மாரும் அவர்களது பிள்ளைகளும் பொருளாதார ரீதியாக இன்னல்களுக்கு முகங்கொடுப்பது மட்டுமன்றி நிம்மதியையும் இழந்து விடுகின்றனர்.

இது போன்ற காரணங்களால் மாணவர் இடைவிலகல், துர்நடத்தை போன்றவை சமூகத்தில் அதிகரிக்கின்றன. இந்நிலைமையை மாற்ற ஆசிரியர்களுடன் மாணவர்கள் கைகோர்த்து செயற்பட வேண்டும்.

மலையகத்தில் சமூக மாற்றம் கல்வியினாலேயே சாத்தியமாகும்.
சமூக சிந்தனையுடன் செயற்படும் அதிபர் உட்பட ஆசிரியர்களுடன் இணைந்து பசறையின் கல்வி மாற்றத்திற்கு மாணவர் உதவ வேண்டும் பாடசாலையின் பழைய மாணவன் என்ற வகையில் எனது பங்களிப்பு என்றும் உண்டு எனக் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles