” நாசப்படுத்தப்பட்ட இந் நாட்டில் வாழ்வதை விட, இச் சிசு இறந்ததே மேல். இச் சிசுவின் சடலத்தை வெட்டி சட்டப் பரிசோதனை செய்வதற்கே, எனக்கு பெரும் கவலையாக இருக்கின்றது.”
இவ்வாறு தியத்தலாவை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சானக்க ரொசான் பத்திரன தெரிவித்தார்.
ஹல்துமுள்ளைப் பகுதியின் சொரகுன கிராமத்தைச் சேர்ந்த பிரியந்த ரட்னசிரி (28 வயது) காஞ்சனா உதயங்கனி (27 வயது) ஆகிய இருவருக்குப் முதல் பிள்ளையாக பிறந்து இரு தினங்களில் மரணமான பெண் சிசுவின் சடலத்தின், சட்டப் பரிசோதனையை, சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சானக்க ரொசான் பத்திரன மேற்கொண்டிருந்தார்.
அவ் வேளையின் போதே, டாக்டர் சானக்க ரொசான் பத்திரன பெருங்கவலையுடன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
‘ஒன்பது மாதங்கள் வயிற்றில் சுமந்து, இரு தினங்கள் தாயின் மடியில் இருந்த சிசு, நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, ஆட்டோவிற்கு பெற்றோல் பெற தாமதித்தமையினால், அச் சிசு அநியாயமாக இறந்துவிட்டது. இவ் அநியாயச் சாவை நாம் எதிர்கொண்டுள்ள வேண்டியுள்ளது’ என்று கூறினார்.
மேலும், சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சானக்க ரொசான் பத்திரன தமது முகநூலிலும், ‘தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் இதுவரை 86 சடலங்களை சட்ட வைத்திய பரிசோதனை செய்துள்ளேன். அச் சடலங்களில், பிறந்து இரு தினங்களில் இறந்த இப் பெண் சிசுவின் சடலத்தை வெட்டி பரிசோதனை செய்வதற்கு, எனக்கு பெருங் கவலையாக இருந்தது.
பிறந்து இரு தினங்களான இப் பெண் சிசு, பால் அருந்துவதில் பெருங் குறைவு காணப்பட்டது. இதனால் சிசுவின் உடல் மஞ்சள் நிறமாகி, சிசுவின் இரத்தத்தில் சீனி அளவு வெகுவாகக் குறைந்துவிட்டது.
இச் சிசுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, ஆட்டோவுக்கு பெற்றோல் இன்மையினால், ஒரு மணித்தியால தாமதத்தினால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்தது. இத்தாமதமே சிசு இறக்கக் காரணமாகும். வேளைக்கு பெற்றோல் இருந்திருக்குமாகில், சிசுவை உடன் மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தால், சிசுவை குணமாக்கியிருக்கலாம்’ என்று சிசுவின் படத்துடன் பதிவு செய்துள்ளார்.
இம் மரணம் குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரி டி.எம். திசாநாயக்க மரண விசாரணையை மேற்கொண்டார். அவ் வேளையில் சிசுவின் தகப்பனான பிரியந்த ரட்னசிரி (28 வயது) சாட்சியமளிக்கையில், ‘நான் கிராமத்தில் தச்சு வேலை செய்பவன். எனது மனைவி குழந்தை பிரசவத்திற்காக, ஹல்துமுள்ளை அரசினர் மருத்துவமனையில் அனுமதித்தேன். 20-05-2022ல் எனது மனைவி சுகப் பிரசவமாகி, பெண் குழந்தை கிடைத்தது. இதுவே எனது முதல் குழந்தையுமாகும். அன்று மாலையே எனது மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு கூட்;டி வந்தேன். மறுதினமான 21-05-2022ல் இரவு 8 மணியளவில் குழந்தை அகோரமாக அழத்தொடங்கியது. எனது மனைவி குழந்தைக்கு பால் கொடுக்க முற்பட்டாள். குழந்தை விரும்பி பால் குடிக்கவில்லை. அத்துடன் குழந்தையின் உடம்பு சிறிது சிறிதாக மஞ்சள் நிறமடைந்தது. நாம் பயந்துவிட்டோம்.
குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பல முயற்சிகளை மேற்கொண்டேன். பெற்றோல் இன்மையினால் ஆட்டோக்கள் எதனையும் பெற முடியவில்லை. ஒரு மணி நேர தாமதத்தின் பின்னர், ஆட்டோவொன்று கிடைத்தது. அதன் மூலம் குழந்தையை ஹல்துமுள்ளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். குழந்தைக்கு வருத்தம் கடுமையானதினால், ஆரம்ப சிகிச்சைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு, தியத்தலாவை அரசினர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். றெ;றோல் இன்மையே, எனது குழந்தை மரணிக்க காரணமாகியுள்ளது. ஒரு மணித்தியாலத்திற்கு முன் குழந்தை கொண்டு வந்திருப்பின், குழந்தையைக் குணமாக்கியிருக்கலாமென்றும் டாக்டர்கள் கூறினர்’ என்று பெரும் சத்தத்துடன் அழத்தொடங்கினார்.
அத்துடன் குழந்தையின் தாயான காஞ்சனா உதயங்கனி (27 வயது) யும் அழுத நிலையில் சாட்சியமளித்தார். ஆனாலும், அவர் மயக்க நிலையிலேயே காணப்பட்டார்.
இறுதியில் திடீர் மரண விசாரணை அதிகாரி டி.எம். திசாநாயக்க, அநியாயமான சாவாகவே இதனைக் கருதுகின்றேன். உரிய வேளையில் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டிருப்பின் சுகமாக்கியிருக்கலாம். குழந்தையின் சடலத்தை புதைப்பதற்கு அனுமதி வழங்கி, சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.