பதுளையில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பசறை, வெளிமடை, பண்டாரவளை மற்றும் பதுளை பகுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இவ்வாறு பெய்து வரும் கடும் மழையின் காரணமாக விவசாய நடவடிக்கைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டங்களில் இறப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் வேலையின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடும் மழையுடன் இடி, மின்னல் தாக்கம் அதிகரித்துள்ளதனால் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை ஹாலிஎல, கின்ரூஸ் தோட்டப் பகுதியில் இடி, மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயங்களுக்கு உள்ளாகி பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறிய அளவிலான மண்சரிவு அனர்த்தங்கள் பதிவாகி வருவதுடன் மழையுடனான வானிலை தொடரும் பட்சத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படலாம் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடும் மழை காரணமாக காய்கறி செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் அவற்றின் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்க கூடும் என காய்கறி மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர் மழையினால் ஆறுகள், ஓடைகள் என்பவை பெருக்கெடுத்துள்ளதுடன் டெங்கு காய்ச்சல் உட்பட தொற்று நோய்களும் மாவட்டத்தில் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் காய்ச்சல், தடிமன் போன்ற நோய்கள் பரவி வருவதை அவதானிக்க முடிகின்றது.

பசறை நிருபர்.

Related Articles

Latest Articles