பதுளை வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றினால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர் கடந்த ஐந்து தினங்களில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலினால் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் எலிக்
காய்ச்சலினால் 30 பேர் தற்போயை நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பதுளை மருத்துவமனையின் விசேட வைத்திய நிபுணரும், அரச வைத்திய அதிகாரிகள் சங்க பதுளை மாவட்டக்கிளைத் தலைவருமான பாலித்த ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறும்போது,
” பதுளை மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். கடந்த ஐந்து தினங்களில் மட்டுமே, இம்மரணங்கள் இடம்பெற்றுள்ளன. பதுளை, பசறை, மடுல்சீமை, லுணுகலை, எல்ல, பண்டாரவளை, மகியங்கனை ஆகிய இடங்களிலிருந்து, பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 14 வயதுடைய சிறுமியொருவரும் உள்ளடங்கியுள்ளார்.
பதுளையில் டெங்கு காய்ச்சலினால் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையினால் பதுளை ஓயா பெருக்கெடுத்து சுமனதிஸ்ஸகம, அந்தெனிய, யாழ்ப்பாணவத்தை ஆகிய இடங்களிலுள்ள வீடுகள் நீரில் மூழ்கின. இதனால் பலர் எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு, பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.” – என்றார்.
எம். செல்வராஜா, பதுளை