பதுளை மாவட்டத்தில் காணிகள் அபகரிப்பு

பதுளை மாவட்டத்தில் பசறை, தெமோதரை, ஹப்புத்தளை ஆகிய மூன்று இடங்களில்பெருந்தோட்டக் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள், துரிதமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இச் செயற்பாடுகளினால் சுமார் 102 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் செய்வதறியாத நிலையினை எதிர்நோக்கியுள்ளனர். மேலும் ஹப்புத்தளை நீட்வூட் தோட்ட அரச பாடசாலையையும் அகற்ற கோரப்பட்டுள்ளது. அகற்ற மறுப்பின் பாடசாலை அமைந்துள்ள காணிக்கு பணம் செலுத்த வேண்டுமென்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து, பெருந்தோட்ட மக்கள், ஊவா மக்கள் ஒன்றியம் ஊடாக பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை அமைப்பிடம் இன்று 27-02-2022 இல் புகார் செய்துள்ளனர்.

பசறை – கோணக்கலை பெருந்தோட்டம்

கோணக்கலை பெருந்தோட்டப் பசறைப் பிரிவில் இரு தொழிலாளர் குடும்பங்கள்குடியிருக்கும் தனிவீடுகளிலிருந்து, அவர்களை வெளியேறுமாறு, பசறைப் பிரதேச செயலகம் ஊடாக உத்தரவிடப்பட்டிருக்கின்றது. அதற்கான அறிவுறுத்தல் பதாதைகளும் குறிப்பிட்டவீட்டுச் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன. அரசின் ஒரு இலட்ச வேலைத்திட்டத்திற்கமைய “சேவாபியச” என்ற சேவை நிலையம் அப்பகுதியில் அமையவிருப்பதினால், குறிப்பிட்ட இரு வீடுகளிலிருந்தும் தொழிலாளர்களை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறிப்பிட்ட இரு வீடுகளும் பெருந்தோட்ட கூட்டுறவு வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நிருமாணிக்கப்பட்டதாகும்.

இவ் வீடுகளிலுள்ள தொழிலாளர்களை, வெளியேற்றும் பட்சத்தில், அவர்களுக்கு குடியிறுப்பதற்கு வேறு வீடுகளோ, லயக் குடியிறுப்புக்களோ இல்லாதுள்ளன. இவ்விரு குடும்பங்களிலும் 10 குடும்ப உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.

இவ்விரு குடும்பங்களில் சந்திராதேவி – 5 பேர், லோகேஸ்வரன் – 5 பேர். இவர்களில் சந்திரா தேவியின் கணவன் சண்முகம் என்பவர் ஏற்கனவே இறந்துவிட்டதினால் அக் குடும்பம் பெண் தலைமைத்துவ குடும்பமாகவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் வீடுகள் இரண்டுமே கோணக்கலை பெருந்தோட்டப் பிரிவிற்கு சொந்தமானதாகும்.

பசறை – கோணக்கலை பெருந்தோட்டக் கீழ்ப்பிரிவு

பசறை – கோணக்கலை பெருந்தோட்ட கீழ்ப்பிரிவில் உள்ள 3ம் இலக்கக் காணி அதே தோட்டத்தைச் சேர்ந்த ரெங்கையா தியாகராஜா, பரமசிவம் சரவணமுத்து, வரதராஜ் ஆனந்தராஜ், நடராஜா இளையராஜா, சரவணமுத்து பரமேஸ்வரன் ஆகியோர் கையகப்படுத்தியுள்ளனர். இது குறித்து தோட்ட நிருவாகம், பசறைப் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளது. இம் முறைப்பாட்டை விசாரணை செய்த பசறைப் பொலிசாரிடம், தாம் ஏற்கனவே இருந்த இடம் மண்சரிவு அபாயம் எதிர்நோக்கப்பட்டதினால், செய்வதறியாத நிலையில் குறிப்பிட்ட இடத்தை கையகப்படுத்தியிருக்கின்றோமென்று 3ம் இலக்கம் காணியை கையகப்படுத்திய ஐந்து பேரும் பொலிசாரிடம் தெரிவித்தனர். பொலிசார் இதனை ஏற்றுக்கொண்டு, பசறை பிரதேச செயலாளருக்கு, பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட ஐவரும் குடியேறுவதற்கு இடமொன்றினை உடன் ஒதுக்கிக் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.

தெமோதரை மீறியகல பெருந்தோட்டப் பிரிவு

தெமோதரைப் பகுதியில் மீறியகலை பெருந்தோட்டப் பிரிவில் இரு லயக் குடியிறுப்புக்களை அகற்றி, அவ் வழியாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு பாதையமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்ல பிரதேச செயலாளரே, மேற்படி செயற்பாட்டினை மேற்கொண்டிருக்கின்றார். இச் செயற்பாடுகளுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்ததையடுத்து, பிரதேச செயலாளர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் 25797 என்ற தொடர் இலக்கப் பிரகாரம் வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

மீறியகலை பெருந்தோட்டப் பிரிவின் குறிப்பிட்ட இரு லயக் குடியிறுப்புக்களிலுள்ள பெட்ரிக் போல்ராஜ், எஸ். ஸ்ரீகாந்த், எஸ். திலகராஜ், எஸ். செல்வமணி, கே. ராஜமூர்த்தி, எம். சக்திவேல், ஆர். கவிராஜ், எம். நந்தகுமார் ஆகிய தொழிலாளர்களுக்கெதிராகவே தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளனவாகும்.

ஹப்புகஸ்தன்னை தோட்ட நிருவாகத்திற்கெதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படாமல், தோட்டத் தொழிலாளர்கள் பாதை அமைப்பிற்கு இடையூராக இருப்பதாகக் கூறியே மேற்படி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹப்புத்தளை நீட்வூட் தோட்டம்

ஹப்புத்தளைப் பகுதியின் நீட்வூட் பெருந்தோட்டம் சொய்சா என்பவருக்குரிய தனியார் தோட்டமாகும். 1972ல் பெருந்தோட்டப் பாடசாலைகளை அரசு கையேற்கும் திட்டத்தில், இப்பாடசாலையும் உள்ளடங்கியுள்ளது. அரசு பொறுப்பேற்ற இப்பாடசாலைக்கு 60×20, 20×20, 47×57 ஆகிய அளவுகளைக் கொண்ட மூன்று கட்டிடங்களும் அமைந்துள்ளன.

ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையில் வகுப்புக்கள், இப்பாடசாலையில் உள்ளன. ( ¾ ) முக்கால் ஏக்கர் காணியில் இப்பாடசாலைக் கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் ஆகியனவும் அமைந்துள்ளன. குறிப்பிட்ட பாடசாலை அகற்றப்படல் வேண்டும். அல்லது அக்காணிக்கு பெறுமதியை வழங்க வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சொய்சா தோட்டமென்று அழைக்கப்பட்டு வந்த நீட்வூட் தோட்டத்தை சொய்சா என்பவர், முன்னால் கொழும்பு ஆளுனரான அசாத் சாலிக்கு விற்பனை செய்யப்பட்டது. அவர் பொறுப்பேற்றதும் குறிப்பிட்ட பாடசாலைக்குமு;, அப்பகுதியில் வாழ்ந்து வரும் தோட்டம் தொழிலாளர்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

பாடசாலைக்கு ஏற்பட்டிருக்கும் நிலை குறித்து, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு, பாடசாலை அதிபர் எஸ். ஜெகன் (077-0855247) உடன் அறிவித்துள்ளார். மேலும் இத் தோட்டத்தில் வாழ்ந்து வரும் 75 குடும்பங்களுக்குமான எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக ஊவா மக்கள் ஒன்றியம் ஊடாக எம்.பி.பி.எல்.ஆர். என்ற பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை அமைப்பிடம் இன்று 27-02-2022ல் புகார் செய்யப்பட்டுள்ளது.

எம். செல்வராஜா பதுளை நிருபர்

Related Articles

Latest Articles