நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைவான தாழ் அமுக்கத்தின் காரணமாக பதுளை மாவட்டத்தின் பதுளை, ஹாலிஎல, பசறை உட்பட பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் ஊவா மாகாணத்தில் 150 மில்லிலீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறியிருந்த நிலையில் இவ்வாறு கடும் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் ஓடைகளும், அருவிகளும் பெருக்கெடுத்துள்ளன. பதுளை- நுவரெலியா வீதியின் பல பகுதிகளில் சிறிய அளவில் வீதிகளில் மண்மேடுகள் சரிந்துள்ளன.
அப்புத்தளை, மடுல்சீமை மற்றும் நமுனுகுல பகுதியில் பனிமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவி வருகிறது. பிற்பகல் வேளையில் மழை சற்று தணிந்துள்ள போதிலும் மாலையில் மழை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றன.
பதுளை மாவட்டத்திற்கு சிவப்பு அனர்த்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பல பகுதிகளில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பசறை நிருபர்
