பதுளை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றாளர்களுக்கான மூன்று (03) இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்கள் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன என்று பதுளை மாவட்ட கோவிட் 19 தடுப்பு செயலணியின் பிரதானியும், பதுளை மாவட்ட எம் பியுமான மேஜர் சுதர்சன தெனிபிட்டிய தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றாளர்கள் அதிகரிப்பினால், அவர்களுக்கான சிகிச்சை நிலையங்களில் இடம்பற்றாக்குறை குறித்து வினவிய போதே, மேஜர் சுதர்சன தெனிபிட்டிய மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், ‘பதுளை – எலதலுவை இராணுவ முகாம் படையணியினர், எலதலுவையில் கோவிட் 19 தொற்றாளர்கள் நூறு பேர், தங்கியிருந்து சிகிச்சை பெறும் பொருட்டு, பெருங் கட்டிடமொன்றினை அமைத்துள்ளனர். அத்துடன், நூறு கட்டில்களையும், அவர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
மேலும், பதுளை – இ.போ.ச. டிப்போவிற்கு முன்னால் உள்ள மூடிக்கிடக்கும் ஆடைத் தொழிற்சாலையையும், நாம் சுவீகரித்துள்ளோம். இத் தொழிற்சாலைக் கட்டிடத்தையும், கோவிட் 19 தொற்றாளர்களுக்கான இடைத்தங்கல் நிலையமாக மாற்றியுள்ளோம்.
அடுத்து, மகியங்கனைப் பகுதியில் ஊரனிய என்ற இடத்திலும் கோவிட் 19 தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையமொன்றினை அமைத்துக் கொண்டிருக்கின்றோம்.
கோவிட் 19 தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில், அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதார சேவைப் பிரிவினருடன் இணைந்து, முன்னெடுத்து வருகின்றோம். அத்துடன் பதுளை மாவட்ட கோவிட் 19 தடுப்பு செயலணியினர், அடிக்கடி கூடி ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்’ என்றார்.
எம். செல்வராஜா, பதுளை










