பதுளை மாவட்ட மக்களுக்கான விசேட அறிவித்தல்

பதுளை மாவட்டத்தில் பரவி வரும் கொவிட் தொற்று, டெங்கு காய்ச்சல் என்பவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர மாவட்டத்தில் வாழும் பொது மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளவதற்காக, பதுளை மாவட்ட கொவிட் தடுப்பு கமிட்டி கூட்டத்தில் இரு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம். எல்.உதயகுமார தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; பதுளை மாவட்டத்தில் கொவிட், டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரப் பிரிவினர் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு தெளிவூட்டல் தகவல்களை வழங்கி வருகின்றனர்.

சுகாதார பிரிவினர் குறித்த நோய்களிலிருந்து விடுபடுவது தொடர்பாக வழங்கும் சுகாதார ஒழுங்கு விதிமுறைகளை பொதுமக்கள் அலட்சியப்படுத்தி வருவதால் இந்நோய்கள் மாவட்டத்தில் தீவியமடையும் நிலைமை தோன்றியுள்ளது.

விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலகுவாக எஸ்.எல்.டி.மொபிடெல் நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கப்பட்டுள்ள 0553134223, 0553134224 என்ற அவசர இலக்கங்களாக 24மணி நேரமும் இச் செயற்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

பொது மற்றும் தனியார் இடங்கள், அரச காரியாலயங்கள், தொழிற்சாலைகள், பாடசாலைகள், தோட்டங்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பாக இவ்விரு நோய்கள் குறித்த விதி மீறல்களை மாவட்டத்தில் உள்ள சகல பிரஜைகளும் வழங்க முடியும். தகவல் வழங்குனர் குறித்த விபரங்கள் இரகசியமாகப் பேணப்படும்.

தவிர, மாவட்டத்தில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்படும் அவசர அனர்த்தங்கள், அனர்த்த நிலைமைகள் தொடர்பாகவும் தகவல் வழங்க மேற் கூறப்பட்ட தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles