பயங்கரவாத தடைச்சட்டத்தை கொழுக்கட்டையுடன் ஒப்பிட்ட சிறிதரன்

” கொழுக்கட்டையும், மோதகமும் வடிவங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றின் உள்ளடக்கம் ஒன்றுதான். அதேபோல்தான் புதிய பயங்கரவாத தடைச்சட்டமும். பழைய சட்டத்தில் இருந்த அனைத்து ஏற்பாடுகளும் இதில் உள்ளன. அப்பாவி மக்கள்மீது அவை பாயத்தான்போகின்றன.”

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் 44 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நிலையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அச்சட்டத்தின்கீழ் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். 66 ஆயிரம் போராளிகள் இந்த மண்ணில் இருந்து துடைத்தெறியப்பட்டுள்ளனர். ஜே.வி.பி. போராளிகள்கூட கொல்லப்பட்டனர்.

இராணுவத்திடம் தமது உறவினர்களை ஒப்படைத்தவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர். ஆனால் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காணவில்லை. அருட்தந்தை பிரான்ஸில் தலைமையில் பல போராளிகள் சரணடைந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. அதற்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால் நீதிகோரி உறவுகளுக்காக போராடுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுகின்றனர். ஜெனிற்றா என்ற தாய்கூட அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.” – என்றார்.

Related Articles

Latest Articles