படுகொலை செய்யப்பட்டார் என சந்தேகிக்கப்படும் ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலம், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இன்று (மே 25) காலை 8.30 மணிக்கு 5 பேர் கொண்ட மருத்துவ குழு முன்னிலையில் தோண்டியெடுக்கப்படவுள்ளது.
இதன்போது குற்றப் புலனாய்வு அதிகாரிகள் (SOCO), கைரேகை அதிகாரிகள், ஷாப்டரின் உறவினர்கள், அவரது சடலத்தை அடையாளம் கண்டவர்கள், மலர்சாலை முகாமையாளர், தலைமை தடயவியல் மருத்துவ அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரும் இவ்விடத்தில் பிரசன்னமாகி இருப்பார்கள் என தெரியவருகின்றது.
ஷாப்டரின் சடலத்தை தோண்டியெடுப்பதற்காக இன்று பொரளை மயானத்துக்கு வருமாறு, ஐவரடங்கிய வைத்திய நிபுணர் குழுவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த 22 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
சிஐடியினர் நீதிமன்றத்தின் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஷாப்டரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக சடலம் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது என தெரியவருகின்றது.
விசேட பாதுகாப்பின்கீழ்தான் சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளது.
